Apr 7, 2025 - 06:05 AM -
0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ஐதராபாத் மைதானத்தில் நேற்றிரவு (06) சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக நித்திஷ் குமார் 31 ஓட்டங்களையும், ஹென்ரிச் க்ளாசன் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்டுக்களையும் பிரதிஷ் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 153 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், வொஷிங்டன் சுந்தர் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் சார்பாக மொஷமட் ஷமி ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.