Apr 8, 2025 - 02:41 PM -
0
MAS Holdings இன் துணை நிறுவனமான Bodyline (Private) Limited, இலங்கை தடகள சம்மேளனத்துடன் (SLA) மேற் கொண்டுள்ள கூட்டு ஒத்துழைப்பின் அடுத்த கட்டமாக, 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தடகள வீர, வீராங்கனைகளின் விளையாட்டு உடை தொகுப்புகளை உத்தியோகப்பூர்வமாக வழங்கியது. இந்த விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குவதற்கான நிகழ்வு 2025 ஏப்ரல் 7 ஆம் திகதி நடைபெற்றது. மேலும், 2028 ஆம் ஆண்டு லோஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரை, Bodyline நிறுவனம் இலங்கை தடகள விளையாட்டு சம்மேளனத்துடன் இணைந்து, நாட்டின் தடகள விளையாட்டுக்கான உத்தியோகப்பூர்வ உடை பங்காளியாக செயல்படவுள்ளது.
இந்த நிகழ்வில், Bodyline நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஹன் ராஜபக்ஷ அவர்களால் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டு உடை தொகுப்புகள், இலங்கை தடகள விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ அவர்களுக்கு கையளிகப்பட்டன. பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுகத் திலகரத்ன அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். MAS நிறுவனத்தால் உயர்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர் செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்ட இந்த உடை தொகுப்புகள், இலங்கை விளையாட்டு வீர, வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் போது அவர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே இதன் சிறப்பம்சமாகும்.
இலங்கையின் பாரம்பரிய மேலத்தேய நடனத்தின் அழகையும், இலங்கை விளையாட்டு வீரர்களின் பலத்தையும் ஒருங்கிணைத்த ஒரு தனித்துவமான வடிவமைப்பாக இந்த ஆடை தொகுப்பைக் குறிப்பிடலாம். இந்த நடனத்தில் காணப்படும் சக்திவாய்ந்த இயக்கங்களும் விளையாட்டு வீரர்களின் திறனும் இணைந்து, இலங்கையர்களின் வலிமையையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.
Bodyline நிறுவனத்தின் பிரதம நிறைவேவற்று அதிகாரி சஹன் ராஜபக்ஷ அவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், உலக அளவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நமது விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு, புத்தாக்கமான ஆடை தொழில்நுட்பம் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட மிக உயர்ந்த தரமான விளையாட்டு உடைகளை வழங்க முடிந்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். பல ஆண்டுகளாக SLA உடன் நாங்கள் வைத்திருக்கும் வலுவான கூட்டு சேர்வு, விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதோடு அவர்களின் அதிகபட்ச திறன்களை வெளிப்படுத்துவதற்கும் நம்பிக்கை அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.
MAS Holdings நிறுவனத்தின் குழுமத்தின் உற்பத்தி மாற்ற அதிகாரி திரு. தில்ஷான் முஹம்மட் கருத்து தெரிவிக்கையில், உலகளாவிய போட்டிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதற்குத் தேவையான மிக உயர்ந்த தரமான செயல்திறன் ஆடைகள் நமது இலங்கை விளையாட்டு வீரர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நாங்கள் புத்தாக்கமான உற்பத்தி செயல்முறைகளை மேலும் முன்னேற்றுவதில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.
இந்த ஆண்டு, தேசிய தடகள விளையாட்டு அணி புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டு உடை தொகுப்புகளை அணிந்து பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் 6வது கனிஷ்ட (18 வயதுக்குட்பட்ட) ஆசிய தடகள சாம்பியன்ஷிப், தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப், உலக அஞ்சலோட்ட சாம்பியன்ஷிப், ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப், ஆசிய இளைஞர் விளையாட்டு மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஆகியவை அடங்கும்.
இலங்கை தடகள விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், Bodyline போன்ற நம்பகமான கூட்டாளர் ஒருவர் இருப்பதால், எங்கள் விளையாட்டு வீர, வீராங்கனைகள் உயர்தரமான சிறந்த விளையாட்டு உடைகளைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. இது அவர்கள் தங்கள் பயிற்சி மற்றும் செயல்திறனில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது. இந்த கூட்டு சேர்வு, இலங்கை தடகள விளையாட்டை முன்னேற்றுவதற்காக இரு நிறுவனங்களும் ஒரே நோக்கத்துடன் செயல்படுவதற்கான சிறந்த சான்றாகும். என தெரிவித்தார்.
பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள் MAS மற்றும் Bodyline நிறுவனங்கள் இலங்கை விளையாட்டுத் துறைக்கு வழங்கும் தனித்துவமான பங்களிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், எங்கள் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் முன்னேற்றத்திற்கு இத்தகைய அரச-தனியார் கூட்டு சேர்வுகள் மிகவும் முக்கியமானவை. எங்கள் நாட்டின் விளையாட்டுத் திறன்களுக்கு ஆதரவாக உலகத் தரத்திலான விளையாட்டு உடைகளை வழங்குவதில் MAS நிறுவனத்தின் அர்ப்பணிப்பை நாம் மதிக்கிறோம். என தெரிவித்தார்.
இலங்கையின் முன்னணி விளையாட்டு உடை உற்பத்தியாளரான MAS, உள்நாட்டு விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு சர்வதேச அளவில் போட்டியிட உயர்தர விளையாட்டு உடைகளை வழங்கி, தொடர்ச்சியாக புத்தாக்கங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.