Apr 9, 2025 - 05:55 PM -
0
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நான்கு அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்தச் சூழலில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் இந்தத் தொடரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. மும்பை அணி 8 ஆவது இடத்திலும், சிஎஸ்கே அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளைப் பெற வேண்டும். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
இதனால், சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன. இந்த ஒன்பது போட்டிகளில் குறைந்தபட்சம் ஏழு போட்டிகளிலாவது சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும். அப்படி ஏழு போட்டிகளில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியின் புள்ளிகள் 16 என்ற அளவை எட்டும். ஆனால், தற்போது சிஎஸ்கே இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, இது மிகவும் கடினமாகத் தெரிகிறது.