Apr 9, 2025 - 10:08 PM -
0
இந்தியாவின் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் பேத்தி இன்று (9) பீகாரில் அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி தலைவர் ஜித்தன்ராம் மஞ்சி, 2014-15 காலகட்டத்தில் பீகார் முதல்வராகவும் இருந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் என்டிஏ கூட்டணியில் கயா தொகுதி எம்.பி.யாக தேர்வானார். தற்போது இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சராக உள்ளார்.
இவரது பேத்தி சுஷ்மா தேவி பீகாரின் கயாவில் தனது கணவன் ரமேஷ் உடன் வசித்து வந்தார். சுஷ்மாவும் ரமேஷும் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் ரமேஷ் தனது மனைவியை நாட்டுத் துப்பாக்கியால் வீட்டிற்குள் வைத்து சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவரைச் சுட்ட பிறகு, ரமேஷ் ஆயுதத்தை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் கிராம மக்கள் அங்கு விரைந்தனர்.
உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சுஷ்மாவை கொண்டு சென்றனர். ஆனால் வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கணவன் ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.