Apr 12, 2025 - 01:46 PM -
0
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடிந்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் தொழில்முனைவோருமான பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எந்தவொரு காரணத்திற்காகவும் அரசாங்கம், இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை பாராளுமன்றில் தாக்கல் செய்யாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
''NPP அரசாங்கம் அண்மை நாட்களில் மோடியுடன் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் விஜித ஹேரத் இந்த ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்தில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். ஆனால் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றி அது எதுவும் கூறவில்லை. தேவைப்பட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுங்கள். அரசாங்கம் இப்போது இந்த நிலையை அடைந்துள்ளது. நான் மிகவும் வருந்துகிறேன். எந்த அரசாங்கமும் இதைச் செய்யவில்லை.
இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை ஏதேனும் ராஜதந்திர காரணங்களுக்காக வெளியிட முடியாவிட்டால், அரசாங்கம் முதுகெலும்புடன், "ஆம், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம், ஆனால் இந்தக் காரணத்திற்காக நாங்கள் அதை முன்வைக்கவில்லை" என்று சொல்ல முடியும். இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் யாருக்கும் தெரியாது. தெரியப்படுத்தவும் மாட்டார்கள்'' என்றார்.

