Apr 13, 2025 - 09:25 AM -
0
நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில், உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது.
செரிமானத்திற்கு தேவையான பித்தநீரை உற்பத்தி செய்வது, மெட்டபாலிசத்தை ஒழுங்குபடுத்துவது, நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றுவது, சத்துக்களை சேமிப்பது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது போன்ற பல முக்கிய பணிகளை கல்லீரல் செய்கிறது.
இத்தனை பொறுப்புகளை ஏற்றிருக்கும் கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகம் உள்ளது. கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் முக்கிய செயல்பாடுகள் மந்தமடைந்து, பல்வேறு ஆரோக்கிய சிக்கல்கள் தோன்றலாம்.
சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால், கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களே கல்லீரல் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கல்லீரல் கடுமையாக சேதமடைந்தால், குறிப்பாக இரவு நேரத்தில் சில அறிகுறிகள் தோன்றுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1. பசியின்மை
கல்லீரல் மெதுவாக செயல்படும்போது, செரிமானம் பாதிக்கப்பட்டு, இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரிக்கிறது. இது நீடித்தால், குமட்டல் அடிக்கடி ஏற்படுவதோடு, பசியுணர்வு குறைந்து, பசி ஏற்படுவதே தடைபடும்.
உடலில் பசியை கட்டுப்படுத்தும் லிப்டின் (பசியைக் குறைக்கும்) மற்றும் க்ரெலின் (பசியை அதிகரிக்கும்) என்ற இரு ஹார்மோன்கள் உள்ளன. கல்லீரல் பாதிக்கப்பட்டால், க்ரெலின் உற்பத்தி குறைவதால் பசியின்மை ஏற்படுகிறது.
2. தூக்கமின்மை
கல்லீரல் செயலிழப்பின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று சீரற்ற தூக்கம். உடலில் மெலடோனின் மற்றும் குளுக்கோஸ் செயல்முறைகளில் மாற்றம் ஏற்படும்போது, சரியான தூக்கம் கிடைப்பது கடினமாகிறது.
ஆய்வுகளின்படி, இரவில் தூக்கமின்மையை அனுபவிப்பது கல்லீரல் பிரச்சனையின் எச்சரிக்கையாக இருக்கலாம். இதை அலட்சியப்படுத்தாமல் பரிசோதனை செய்ய வேண்டும்.
3. சரும அரிப்பு
கல்லீரல் செயலிழப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று தொடர்ச்சியான சரும அரிப்பு, குறிப்பாக இரவு நேரத்தில் தூங்கச் செல்லும்போது இது தீவிரமடையும். இந்த அரிப்பு உள்ளங்கை, உள்ளங்கால், கைகால் அல்லது உடல் முழுவதும் ஏற்படலாம்.
காரணமின்றி தோன்றும் இத்தகைய அரிப்பு கல்லீரல் பிரச்சனையைக் குறிக்கலாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டறியுங்கள்.
4. வீக்கம்
இரவில் தூங்கச் செல்லும்போது வயிறு வீங்கியிருப்பதாகவோ அல்லது உப்புசமாகவோ உணர்ந்தால், அது கல்லீரல் செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரல் சரியாக செயல்படவில்லையெனில், திரவங்கள் அடிவயிற்றில் தேங்கி, வீக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தும். இதை அவதானித்தால், உடனே மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்.
5. கண் மற்றும் வாய் வறட்சி
கல்லீரல் செயலிழப்பின் மற்றொரு அறிகுறி கண்கள் மற்றும் வாயில் வறட்சி ஏற்படுவது. முதன்மை பித்தநீர்க்குழாய் அழற்சி என்னும் தன்னுடல் தாக்க நிலை, பித்த நாளங்களை பாதித்து, வாய் மற்றும் கண்களில் வறட்சியை உண்டாக்குகிறது. இத்தகைய அறிகுறி தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
கல்லீரல் உடலின் மிக முக்கிய உறுப்பு என்பதால், அதன் ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். மேலே குறிப்பிட்ட இரவுநேர அறிகுறிகள் தோன்றினால், அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது உயிரிழப்பை தடுக்கும்.
(குறிப்பு: இந்த தகவல்கள் பொதுவான அறிவை அடிப்படையாகக் கொண்டவை. எந்தவொரு அறிகுறியையும் அனுபவித்தால், மருத்துவ நிபுணரை அணுகி சரியான ஆலோசனை பெறுங்கள்)