Apr 13, 2025 - 12:56 PM -
0
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ரிசிராஜ் என்ற சஞ்சு ஜெய்ஸ்வால் மருந்து கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, ஹர்ஷிதா என்ற மகள், ஒரு மகன் உள்ளனர்.
ஹர்ஷிதா அந்த பகுதியை சேர்ந்த வேற்று சமூக வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபருடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஹர்ஷிதா வீட்டை விட்டு சென்று விட்டார்.
மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ரிசிராஜ் குவாலியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் காதல் ஜோடியை தேடி வந்தனர்.
இந்தூரில் காதல் ஜோடி தங்கியிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து காதல் ஜோடியை பொலிஸார் நீதிமன்றில் ஒப்படைத்தனர்.
நீதிமன்ற விசாரணையில் நாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கணவரோடு தான் நான் செல்வேன் என்றும் ஹர்ஷிதா கூறினார்.
ரிசிராஜ் மற்றும் அவரது மனைவி தனது மகளிடம் எவ்வளோமன்றாடி கேட்டும் ஹர்ஷிதா கணவரை விட்டு வரமாட்டேன் என்று தெரிவித்தார். இதனால் ரிசிராஜ் விரக்தி அடைந்தார்.
குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக மகள் திருமணம் செய்ததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பொலிஸர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர்.
மேலும் அங்கு சோதனை நடத்திய போது உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. தனது மகளின் ஆதார் அட்டையில் அந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதில் ஹர்ஷிதா நீ செய்தது தவறு. நான் கிளம்புகிறேன். உங்கள் இருவரையும் நான் கொன்றிருக்கலாம். ஆனால் என் மகளை நான் எப்படி கொல்ல முடியும். ஒரு தந்தையின் வலி யாருக்கும் புரியவில்லை. ஒரு முழு குடும்பமும் அழிக்கப்பட்டு விட்டது. இப்போது சமூகத்தில் எதுவும் மிச்ச மில்லை என்று எழுதியுள்ளார்.
மேலும் அவர் பெற்றோரின் உரிமைகள் மற்றும் வயது வந்த குழந்தைகள் சம்பந்தப்பட்ட சட்ட செயல்முறைகள் குறித்தும் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.