Apr 14, 2025 - 06:34 AM -
0
2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று (ஏப்ரல் 14) அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் உதயமானது.
தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது.
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம்.
2025 ஏப்.14-ம் திகதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கனி காண்பது மிகவும் சிறப்புக்குரியது. தமிழ் புத்தாண்டை பாரம்பரிய முறையில் கொண்டாட நம் முன்னோர் சில வழி முறைகளை கடைபிடித்து வைத்துள்ளனர். அதாவது தமிழ் புத்தாண்டை கொண்டாட முதல் நாளே அனைத்தையும் தயார் செய்து விட வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் சுவாமி படங்களை துடைத்து வைத்து விட வேண்டும்.
விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14/04/2025 அன்று அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் நுழையும் பொழுது பிறக்க இருக்கிறது. இவ்வாண்டு அதிகாலையிலேயே எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி குளித்து முடித்து சுத்த பத்தமாக வீட்டின் மூத்த பெண்கள் இந்த வழிபாடு முறையை துவங்க வேண்டும் எனவே முந்தைய நாளே அதற்குரிய ஏற்பாடுகளை தயார் செய்தால் தான் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விசுவாவசு தமிழ் வருடப்பிறப்பு: கனி காணுதல்
ஞாயிற்றுக்கிழமை அன்று இரவே பூஜைக்கு உரிய ஏற்பாடுகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சித்திரை பூஜையில் மிகவும் முக்கியமாக இடம் பெற வேண்டிய ஒரு பொருள் கண்ணாடி! புதிய அல்லது பழைய பூஜைக்கு உரிய கண்ணாடியை பூஜையில் வையுங்கள். அதற்கு சந்தன, குங்குமம் இட்டு, கொஞ்சம் பூவை வையுங்கள். கண்ணாடியில் தெரியும் படியாக அதற்கு முன்பாக மற்ற பொருட்களை தாம்பூல தட்டில் தயார் செய்ய வேண்டும்.
ஒரு பெரிய தாம்பூலத்தில் முக்கனி பழங்களை அடுக்கி வைக்க வேண்டும். வாழை, மாம்பழம், பலாப்பழ சுளைகளை அழகாக அடுக்கி மேலே கொஞ்சம் பூவையும் வையுங்கள். அடுத்த தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, மஞ்சள் நிறத்திலான பூ, பழம், மஞ்சள் கிழங்கு, கண்ணாடி வளையல் போன்றவற்றை அடுக்கி வையுங்கள்.
மற்றொரு தாம்பூல தட்டில் சில்லறை நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும், தங்க நகை, உங்களிடம் இருக்கும் மற்ற ரத்தினங்களும் அடுக்கி வைக்க வேண்டும். அடுத்ததாக நவதானியங்களை அடுக்கி வைக்க வேண்டும். நவதானியங்களை வைக்க முடியாவிட்டால் அதில் ஏதாவது ஒரு தானியங்களை வையுங்கள். மற்றொரு தட்டில் அரிசி, பருப்பு, கல் உப்பு, வெல்லம், பேரீச்சை போன்றவற்றை வையுங்கள். ஒவ்வொரு பொருட்களையும் கோபுரம் போல் குவித்து வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பித்தளை (அ) செம்பு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை போட்டு, துளசி இலைகளை போட்டு தீர்த்தம் செய்து வையுங்கள். காலையில் எழுந்து, கண் விழிக்கும் முன் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தட்டில் வைத்துள்ள பழங்கள், பணம், நகை ஆகியவற்றை தான் முதலில் பார்க்க வேண்டும். பிறகு கண்ணாடியில் அவரவர்களின் முகத்தை பார்த்து விட்டு, மகாலட்சுமியை நினைத்து, தட்டை தொட்டு வணங்கி விட்டு, அன்றாட வேலைகளை செய்யலாம்.
இதனை கனி காணுதல் என்பார்கள். இவ்வாறு செய்வதனால் வரப்போகும் வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும் என்றும் செல்வம் பெருகும் என்றும் கோவில் குருக்களால் சொல்லப்படுகிறது. வாசலில் வண்ண கோலம் பெரியதாக போட்டு அதில் நடுவில் கிழக்கு முகமாக ஒரு விளக்கை ஏற்றி மகாலட்சுமியை வரவேற்க வைக்க வேண்டும்.
தமிழ் புத்தாண்டு வழிபாடு நேரம்:
காலை 6 மணி முதல் காலை 7.20 மணி வரை. இந்த நேரத்தை தவறவிட்டால் காலை 9.10 மணி நிமிடம் முதல் 10.20 மணி வரை வழிபடலாம். மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை. நீங்கள் கோவிலுக்கும் சென்று வழிபடலாம். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். ஒரு வருடம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது இயற்கையின் நீதி. எனவே சாதம், புளிக்குழம்பு, சாம்பார், வேப்பம் பூ ரசம், மாங்காய் பச்சடி போன்ற அறுசுவை உணவுகளை உட்கொள்ளவும். காலையில் 5.30 மணிக்கு எழுந்துவிட்டு 5.45 மணி முதல் 6 மணிக்கு உள்ளாக சூரிய வணக்கம் செலுத்தவும். தமிழ் புத்தாண்டில் சீரான உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்திட வாழ்த்துக்கள்.
சுயநலமாக அல்லாமல் பொது நலமாக உலக நன்மைக்காக வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உலக மக்கள் அனைவருக்கும் வறுமை இல்லாமல் இருக்கவே தாம்பூலத்தில் தானியங்களும், அரிசி, பருப்பு போன்றவையும் வைக்கிறோம். செல்வங்களும், மற்ற எல்லா வளங்களும் அனைவருக்கும் கிடைக்க மனதார பிரார்த்தித்து இந்த சித்திரை மாதத்தை வரவேற்று, தமிழ் புத்தாண்டை இனிமையாக கொண்டாடுங்கள்.
புத்தாண்டு மக்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வர வாழ்த்துகிறோம்!