Apr 15, 2025 - 12:46 PM -
0
பண்டிகை காலத்தில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.
13 மற்றும் 14 ஆம் திகதிகளில் குறித்த 412 பேரும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துகளில் பெரும்பாலானவை வீடுகளில் இடம்பெற்ற விபத்துக்கள் என்று சுட்டிக்காட்டிய டொக்டர் இந்திக ஜாகொட, இது தொடர்பாக 110 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், வீதி விபத்துகள் காரணமாக 94 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த டொக்டர் இந்திக ஜாகொட,
"இந்த 412 பேரில், சுமார் 80 பேருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஆண்டு நாம் காணும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பட்டாசு விபத்துக்கள் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உண்மையில், 2 நாட்களிலும் 2 நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இல்லை. இது ஒரு சிறந்த சூழ்நிலை, மேலும் நாம் கவனமாக இருந்தால், விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்பதை இது காட்டுகிறது."