Apr 16, 2025 - 10:43 AM -
0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைமையினை தடவி விட்டு தலையில் குட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிசார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று (15) மாலை மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக் கழக மைதானத்தில் முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட கட்சியின் பிரதேசக் கிளை நிர்வாகிகள், மாநகரசபையின் 20 வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள், பட்டியல் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த பற்றாளர்கள் கௌரவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாநகரசபைக்குப் போட்டியிடும் வட்டார வேட்பாளர்கள் 20 பேரும், பட்டியல் வேட்பாளர்கள் 16 பேருமாக 36 வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத்,
ஊழலை ஒழிப்போம்,வன்முறைகளை இல்லாமல்செய்வோம் என்று ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று பேரம் பேசும் நிலைக்கு மாறியுள்ளது.உங்கள் வாக்குகளை தாருங்கள் அபிவிருத்திகளை செய்கின்றோம் என்று கூறுநிலைக்கு வந்துள்ளார்கள்.இதுதான் இலஞ்சத்தின் முதல்படியாகும்.வாக்குகளை இலஞ்சமாக கேட்கும் நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி மாற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தினை நேசிக்கும் மக்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்து தமிழ் தேசியத்தின் மீதான பற்றுதியை வெளிப்படுத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தீர்க்கதரிசனமாக சிந்தித்துவாக்களித்தனர்.அந்த நிலைமையினை தமிழ் மக்கள் தொடர்ந்து பின்பற்றுவார்கள்.
இன்று தலையினை தடவி தலையில் குட்டும் செயற்பாடுகளையே தேசிய மக்கள் சக்தி முழு நாட்டுக்கும் செய்துவருகின்றது.
கடந்த காலத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியபோது ஜனாதிபதி இங்கு வரவும் இல்லை, மக்களின் நிலைமைகள் தொடர்பில் அறிந்திருக்கவும் இல்லை. ஆனால் இன்று வாக்குக்காக வரவேண்டிய தேவையேற்பட்டுள்ளது.
எமக்கான அரசியல் உரிமையினை தாருங்கள், சிதைந்துபோயுள்ள வடகிழக்கினை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுங்கள் என நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம்.
வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினை கருத்தில்கொண்டு நிதியை ஒதுக்கீடுசெய்யாதவர் இன்று மட்டக்களப்புக்கு வந்து கொங்கிறிட் வீதிகள் அமைப்பதற்கு பணம் தருகின்றேன் என்று சொல்கின்றார். இது ஒரு ஜனாதிபதி பேசும் விடயமாக என தெரிவித்தார்.
--