Apr 17, 2025 - 05:45 PM -
0
கேரள மாநிலம் கொச்சியில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளின் சோதனையின்போது நடிகர் ஷன் டாம் சாக்கோ தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மலையாள சினிமாவில் நடிகர், நடிகைகளிடம் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அண்மைக் காலமாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வருகின்றன.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மலையாள திரைப்பட சங்கத்தில் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பூதாகரம் அடைந்த நிலையில், அதற்குள் அதே நடிகர் போதைப் பொருள் சோதனையின்போது தனியார் விடுதியில் இருந்து தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து அறிந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதை அறிந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ அவசர கதியாக விடுதியில் இருந்து ஓடியதாக சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. விடுதியில் இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக வெளியேறிய சாக்கோ, அங்கிருந்து நீச்சல் குளத்தில் குதித்து அவசரகால வழி மூலமாக சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.