Apr 20, 2025 - 06:41 PM -
0
மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த டிப்பரை கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார் இடைமறித்த போது, உத்தரவை மீறி பொலிஸார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தை தொடர்ந்து குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன்போது டிப்பர் வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதோடு அவை மீட்கப்பட்டதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, மீட்கப்பட்ட பொருட்களும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--