Apr 20, 2025 - 10:34 PM -
0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் மொஹாலி மைதானத்தில் இன்று (20) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக பிரப்ஷிம்ரன் சிங் 33 ஓட்டங்களையும், ஷஷங்க் சிங் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சில் க்ருணல் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துடுப்பாட்டத்தில் விராட் கோலி 73 ஓட்டங்களையும், படிக்கல் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் அர்தீப் சிங், ஹர்ப்ரீட் ப்ரர் மற்றும் சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் ஊடாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

