செய்திகள்
மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி மரணம்

Apr 22, 2025 - 02:42 PM -

0

மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி மரணம்

புத்தளம் - மன்னார் வீதியின், நான்காம் கட்டை பகுதியில் உள்ள விலுக குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், குளத்திற்குள் வீழ்ந்து நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (21) உயிரிழந்துள்ளார். 

புத்தளம் - மன்னார் வீதியின், நான்காம் கட்டை விலுக பகுதியைச் சேர்ந்த எச்.ஹஸீம் அஹ்மட் (36) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் இடம்பெற்ற தினம் குறித்த நபர் தனது நண்பருடன் இணைந்து புத்தளம் - விலுக குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த குளத்தில் வழமைக்கு மாறாக நீர் அதிகரித்து, குளம் முழுவதுமாக தாமரை காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த நபர், திடீரென குளத்திற்குள் வீழ்ந்து காணாமல் போயுள்ளதுடன், அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவல் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து, புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவம் இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை முன்னெடுத்தார். 

உயிரிழந்தவரின் ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர் , நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி ஜனாஸா மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05