வணிகம்
பெண் பயணிகள் விருப்பத்தெரிவினை செயற்படுத்துவதன் மூலம், பெண் சாரதிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்கின்றது Uber

Apr 23, 2025 - 07:26 PM -

0

பெண் பயணிகள் விருப்பத்தெரிவினை செயற்படுத்துவதன் மூலம், பெண் சாரதிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்கின்றது Uber

இலங்கையின் முன்னணி செயலி அடிப்படையிலான போக்குவரத்து அம்சமான Uber, பெண் பயணிகள் விருப்பத்தெரிவினை (Women Rider Preference) இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், இந்த தளத்தினை பயன்படுத்தி அதிகமான பெண் சாரதிகள் பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மூலம் செயற்படுத்தப்படும் இந்த வசதியானது, பெண் பயணிகளிடம் இருந்து வரும் பயணக் கோரிக்கைகளை மட்டுமே பெண் சாரதிகள் ஏற்கும் விருப்பத் தெரிவினை வழங்குகின்றது. குறிப்பாக இரவு நேரங்களில் அல்லது அறிமுகமற்ற பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது அதிக பாதுகாப்பையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும் என்பதற்காக பல பெண் சாரதிகள் இதனைக் கோரியுள்ளனர். 

இந்த வசதியானது, இலங்கையில் கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான வருவாய் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான Uberஇன் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும். சாரதிகள் இந்த வசதியை எப்போது வேண்டுமானாலும் செயற்படுத்தலாம் அல்லது முடக்கிவிடலாம். இந்த வசதியை அவர்கள் விரும்பும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கான முழுமையான கட்டுப்பாடு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிக பயணங்களை மேற்கொள்ளவும், அதிக மணித்தியாலங்களுக்கு வாகனம் ஓட்டவும் மற்றும் வருவானத்தை அதிகரிப்பதற்கும் இந்த வசதி அவர்களுக்கு உதவும். 

இந்த வசதியை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக் கூறி கருத்துத் தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர், கௌரவ (பொறியியலாளர்) எரங்க வீரரத்ன, “Uberஇன் பெண் பயணிகள் விருப்பத் தெரிவினை இலங்கையில் அறிமுகப்படுத்துவது, பாதுகாப்பான மற்றும் அதிக உள்ளடங்கல் தன்மையிலான டிஜிட்டல் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த முயற்சியாகும். இந்த வசதியானது, பெண் சாரதிகளுக்கு அதிக தேர்வு மற்றும் கட்டுப்பாட்டை வழங்குகின்றது. இதன் மூலம், அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்கு நியாயமான வாய்ப்புகளை உருவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான எமது நாட்டின் இலக்கை ஆதரிக்க உதவுகின்றது. சமூக மேம்பாட்டிற்கு புத்தாக்க முயற்சிகள் எந்தளவு சக்திமிக்கவை என்பதை இது வெளிப்படுத்துகின்றது. இந்த நோக்கத்தில் Uber முன்னணியில் உள்ளதோடு, அனைவரையும் உள்ளடக்கிய போக்குவரத்து விருப்பங்கள் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குகின்றது” என்றார். 

Uber Sri Lanka Mobilityஇன் இலங்கைக்கான முகாமையாளர் கௌசல்யா குணரத்ன குறிப்பிடுகையில் : “வாகனம் செலுத்தும்போது மிகுந்த சௌகரியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என பெண் சாரதிகள் எம்மிடம் தெரிவித்தமைக்கு அமைவாக இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் அதிக நேரம் பணியாற்ற விரும்புவதாக பல பெண் சாரதிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பாதுகாப்புக் காரணங்களால் அவர்கள் தயங்குகின்றனர். அவ்வாறான நிலையில், பெண் பயணிகள் விருப்பத் தெரிவானது அவர்களுக்கு பணியின் போது அதிகக் கட்டுப்பாட்டை வழங்குவதோடு, அவர்களுக்கு ஏற்ற வகையில் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ள உதவுகின்றது” எனக் குறிப்பிட்டார். 

பெண் பயணிகள் விருப்பத்தெரிவுகள் என்பது இப்போது உலகளவில் ஐந்து கண்டங்களில் உள்ள 20இற்கும் அதிகமான நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இதில் அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளும் உள்ளடங்கும். பெண் பயணிகள் விருப்பத்தெரிவு செயற்படும் முறை: 

* பெண்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர், Uber Driver செயலி மூலம் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும். 

* சாரதிகள் இந்த வசதியை எப்போது வேண்டுமானாலும் செயற்படுத்தலாம் அல்லது முடக்கிவிடலாம். இது அவர்களின் வசதி மற்றும் நேர அட்டவணையின் அடிப்படையில் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும். 

* பெண் பயணிகளுடன் பெண் சாரதிகளை இணைக்கும் வகையில் இந்த வசதி உள்ளபோதும், சில நேரங்களில் வெவ்வேறு காரணிகளால் இந்த பொருத்தப்பாடுகள் சரியாக அமையாது என்பதையும் Uber புரிந்துகொள்கின்றது. 

இந்த வசதியை அறிமுகப்படுத்துவதன் ஊடாக, சம்பாதிப்பதற்கான நெகிழ்வான வழிகளை விரும்பும் இலங்கைப் பெண்களுக்கு வாகனம் செலுத்துவது ஒரு சிறந்த தெரிவாக அமையும் என்பதை Uber நம்புகின்றது. அதே சந்தர்ப்பத்தில், இந்த தளத்தின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் மேம்படுத்துகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05