Apr 24, 2025 - 01:00 PM -
0
ரயில்வே திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக வழங்கப்படும் பயணச் சீட்டுகளை கொள்வனவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ரயில்வே திணைக்களத்தின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இதில் தொடர்புபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிவது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதவான், வழக்கை செப்டம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

