Apr 24, 2025 - 01:27 PM -
0
பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களை மட்டுமன்றி மனிதநேயமுள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது என இலங்கை தமிழ் அரசுகட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,
றோமன் கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசராகத் தெரிவு செய்யப்பட்ட லத்தின் அமெரிக்க நாடான ஆஜென்ரீனாவைச் சேர்ந்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் மறைவு உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களை மட்டுமன்றி மனிதநேயமுள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவமதக் கட்டமைப்பின் தலைவராக இருந்த பாப்பரசர் பிரான்சிஸ், இன, மத, பூகோள வேறுபாடுகளைக் கடந்து ஒரு பெரிய வலுவற்றவர்களினதும், வசதியற்றவர்களதும், தேவைகளைத் தேடி அலையும் ஏதிலிகளதும் குரலாக ஒலித்தவர்,அவர்களை நேசித்து அவர்களுக்காகக் குரல்கொடுத்தவர்.
ரஷ்யா-உக்ரைன் யுத்தமென்றாலும் சரி, இஸ்ரேல் பலஸ்தீன யுத்தமென்றாலும் சரி சிரிய நாட்டு உள்நாட்டுப் போர் என்றாலும் சரி, போர் நிறுத்தப்பட்டு உலகம் முழுவதிலும் சமாதானம் நிலவ வேண்டும் என்ற மனித இனநேயம் மிக்க மாண்பு கொண்டவராகவும், உலக நாடுகளின் அனைத்துத் தலைவர்களினாலும் மிகவும் மதிக்கப்பட்ட பெரும் மதத் தலைவராக விளங்கினார்.
தமது காலத்தில் உலக அமைதி, ஒற்றுமை, சமாதானம் நிலைத்து நிற்கப்படுவதன் பொருட்டு பல நாடுகளுக்கு விஜயம் செய்து நல்லாசி வழங்கி ஊக்கப்படுத்தியவர்.
அவ்வாறான அவரது உலக நாடுகளின் சுற்றுப்பயணத்தில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அவர் எமது நாட்டுக்கு வருகை தந்தமை பெருமைக்குரியது.
அதிலும் எமது வடக்கு மாகாணத்தின் பெருமைக்குரிய திருத்தலமான மன்னார் மடுமாதா திருத்தலத்திற்கு 2015.01.14 ஆம் திகதி வருகை தந்தமை மதங்கள் கடந்து நாம் செய்த பெரும் பாக்கியமே.
இந்த பெரும் மதத்தலைவரது இழப்பினால் துயருறுவோர் அனைவருடனும் இலங்கை தமிழரசுக் கட்சியினராகிய நாமும் இணைந்து துயர் பகிர்ந்துகொள்கின்றோம் ஏன அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
--