Apr 24, 2025 - 04:38 PM -
0
SLIIT இன் கணினி பீடத்தின் முன்னணி தேசிய மென்பொருள் தயாரிப்புப் போட்டியான CODEFEST 2024 போட்டி கடந்த ஜனவரி 24ஆம் திகதி SLIIT வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. தொடர்ச்சியாக பதின்மூன்றாவது வருடமாகவும் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நாடு முழுவதிலுமிருந்து 4000ற்கும் அதிகமான பங்குபற்றுனர்களை ஈர்த்திருந்தது. நிரலாக்கத் திறன் மற்றும் தொழில்நுட்பத் துறையிலான திறன்களைக் கட்டியெழுப்புவதில் இந்தப் போட்டி முக்கிய பங்காற்றுகின்றமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தப் போட்டியில் பாடசாலை மற்றும் உயர்கல்வி ஆகிய பிரிவுகளின் கீழ் புதுமை நிறைந்த மென்பொருள்கள் தயாரிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டன.
‘கணினி நிரலாக்கத்தின் மூலம் எதிர்காலத்தைப் புதுமைப்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற CODEFEST 2024 போட்டியானது 300ற்கும் அதிகமான பாடசாலைகளிலிருந்து 1,660 மாணவர்கள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள 26 அரச, அரசசார்பற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து 2,616 போட்டியாளர்களை ஒன்றுபடுத்தியது. இந்தப் போட்டியானது பாடசாலை மற்றும் உயர்கல்வி மட்டங்களில் 12 வேறுபட்ட பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் புதுமையான மென்பொருள் வடிவமைப்பு ஆற்றல்கள் கொண்டிருக்கும் பல்வகைத்தன்மை தெளிவாகப் புலப்பட்டது.
உயர்கல்வித் துறை பிரிவின் கீழ் SLIIT, மொரட்டுவை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், NSBM, IIT, KDU உள்ளிட்ட ஏனைய பல நிறுவனங்களிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
CODEFEST போட்டி 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்தும் வளர்ச்சிபெற்று வந்திருப்பதுடன், இது இலங்கையில் தொழில்நுட்பம் சார் கல்வியில் அதிகரித்துள்ள ஆர்வத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்துள்ளது. இளம் வயது முதலே தொழில்நுட்ப திறன்களை அடையாளம் கண்டு வளர்ப்பதன் மூலம் ‘அறிவுக்கான ஆசிய கேந்திர நிலையமாக’மாறுவது என்ற இலங்கையின் இலட்சியத்திற்கு இந்தப் போட்டி நேரடியாகப் பங்களிப்புச் செலுத்துகின்றது.
பாடசாலைப் பிரிவில் ஐந்து போட்டிகள் இடம்பெற்றன. தொடக்கநிலை நிரலாக்கம் பிரிவு தரம் 05 வரையானவர்களை உள்ளடக்கியிருந்ததுடன் இதில் கம்பஹா சுமேதா கல்லூரி வெற்றிபெற்றது. கனிஷ்ட நிரலாக்கம் தரம் 6-10 பிரிவை கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றிபெற்றதுடன், சிரேஷ்ட நிரலாக்கம் தரம் 11-13 பிரிவை மத்துகம சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னக்கரா வித்தியாலயம் வெற்றிபெற்றது. தகவல் தொழில்நுட்பம் குறித்த வினாடிவினாப் போட்டியை குருநாகல் மளியதேவ வித்தியாலம் வெற்றிகொண்டது. செயற்கை நுண்ணறிவுக்கான பரிசு கண்டி ரணபிம ரோயல் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
மிகவும் போட்டி நிறைந்த பட்டதாரிகளுக்கான பிரிவில் சிறந்த அசாதாரண செயல்திறனை வெளிப்படுத்திய மொரட்டுவை பல்கலக்கலைகழம் ஏழு பிரிவுகளில் நான்கு பிரிவுகளை வெற்றிகொண்டது. இந்தப் பல்கலைகழகத்தின் teams DevQuest, Algothon, Datathon, மற்றும் CTF ஆகிய நான்கு அணிகள் வெற்றியாளர்களாகின. இது தவிரவும் NSBM இன் AI Sprint அணியும், IIT இன் Designathon அணியும், SLIIT இன் NetCom அணியும் ஏனைய பிரிவுகளில் வெற்றிபெற்றன.
பரிசளிப்பு விழாவில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக Deakin பலைக்கழகத்தின் பேராசிரியர் பாஸ் பாஸ்கரன், கல்வி அமைச்சிலிருந்து வாசனா எதிரிசூரிய, GIC, Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரசிக கருணாதிலக ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
Deakin University, Sysco Labs, 99X, GTN, Wiley, Bank of Ceylon, Eduscope pvt Ltd, Connex Vectra pvt Ltd., மற்றும் IEEE Computer Society SL Chapter உள்ளிட்ட அனுசரணையாளர்களின் ஒத்துழைப்புடன் SLIIT நிறுவனம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணப்பரிசை வழங்கியது. SLIIT இன் கணினிப் பீடத்தின் பிரதி துணைவேந்தர் பேராசிரியர் நுவன் கோட்டகொட மற்றும் SLIIT கணினிப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பிரதீப் அபேகுணவர்தன இந்தப் போட்டி நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். Codefest 2024 போட்டி நிகழ்வை கணினி பீடத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் கலாநிதி சமந்த ராஜபக்ஷ ஒருங்கிணைத்திருந்தார்.
இலங்கை இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, உள்ளூர் திறமைகளை வளர்ப்பது மற்றும் உலகளாவிய டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்களுடன் அவர்களை வழிநடத்துவது தொடர்பிலேயே SLIIT கவனம் செலுத்துகின்றது. மேலதிக தகவல்களுக்கு communications@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது+94 11 2345678 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.

