Apr 25, 2025 - 10:43 AM -
0
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு இன்றையதினம் (25) பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.
இந்தக் குழுவுக்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமை தாங்குவதுடன், நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ. எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
இக்குழு முதலாவதாக கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றில் கூடியது.
2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 05ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 3 (ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளிற்கு அமைய துர்நடத்தை மற்றும் பதவியின் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு குறித்த சட்டத்தின் 5வது பிரிவுக்கு அமைய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசபந்து தென்னகோன் இன்று (25) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் இருந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி பிணை வழங்கிய போது, நீதவான் அவருக்கு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என தெரிவித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தது.
இதன்படி, மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.
தேசபந்துவுக்கு பிணை வழங்கப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் வரை அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிவானிடம் கோரினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதவான், தேசபந்து தென்னகோன் ஒரு வழக்கில் சந்தேக நபராக இருப்பதாகவும், எனவே அவருக்கு விசேட பாதுகாப்பை வழங்குவது ஏனைய சந்தேக நபர்களுக்கு பாதகமாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டினார்.
நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்ததன் பின்னணியில், தேசபந்து தென்னகோன் நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்திற்கு கார் ஒன்றை வரவழைத்து அதில் ஏறி நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார், மேலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை வழங்கியது.
இந்நிலையில், அழைப்பாணை விடுக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் இன்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு பிரதான வாயில் வழியாக வருகை தந்ததாக தெரியவருகிறது.
மாத்தறை நீதிமன்றத்தின் பிரதான வாயிலிலும் அதைச் சுற்றியும் இன்று விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் வாகனங்களும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

