Apr 26, 2025 - 01:36 PM -
0
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பாடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி துடுப்பாடிய போது ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. இதனால் சென்னை அணி 180-200 ஓட்டங்கள் அடிக்கும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஏனெனில் கமிந்து மெண்டிஸ் வீசிய 12-வது ஓவரில் 3 சிக்சர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய டிவால்ட் பிரேவிஸ் களத்தில் இருந்தார்.
அடுத்த ஓவரை (13-வது ஓவர்) வீசிய ஹர்ஷல் படேல் பந்து வீச்சிலும் 4-வது பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார்.
ஆனால் அடுத்த பந்திலேயே (5-வது பந்து) டிவால்ட் பிரேவிஸ் (42 ஓட்டங்கள், 25 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) தூக்கி அடித்த பந்தை கமிந்து மெண்டிஸ் அந்தரத்தில் பாய்ந்து அபாரமாக பிடியெடுத்தார்.
ஒருவேளை இந்த பிடியெடுப்பை கமிந்து மெண்டிஸ் தவற விட்டிருந்தால் சென்னை அணி நிச்சயம் 180 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருக்கும். ஆட்டத்தின் போக்கை மாற்றிய இந்த பிடியெடுப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

