Apr 27, 2025 - 06:46 PM -
0
உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் போற்றப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு பார்வையிடுவதற்காக வழங்கப்பட்ட சிறி தலதா வழிபாட்டு நிகழ்வு இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது.
அதன்படி, இறுதி நாளான இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாத்திரிகர்களுக்கு புனித தந்த தாதுவை வழிபடும் வாய்ப்பு கிடைத்ததோடு, சுமார் 76,000 பேர் இன்று சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இறுதி நாள் என்பதால் நேற்று இரவு முதல் வரிசையில் நின்ற யாத்திரிகர்களை அடையாளம் காண பொலிஸார் அவர்களுக்கு ஸ்டிக்கர்களை வழங்கியிருந்தனர்.
சிறி தலதா வழிப்பாட்டிற்காக மூன்று நுழைவாயில்களிலும் இன்று யாத்திரிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்காக உணவு தானம் (தன்சல்) வழங்கப்பட்டது.
இந்த யாத்திரிகர்களுக்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குளிர்பான தன்சல் நிகழ்வும் நடைபெற்றது.
நகரத்திற்குள் நுழையும் வாகனங்கள் ஶ்ரீ தலதா மாளிகைக்கு வருகிறதா என்பதை அவதானிக்க, இன்று நகரத்திற்குள் நுழையும் அனைத்து இடங்களிலும் விசேட பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, "சிறி தலதா வழிபாட்டு நிகழ்வுக்காக பாதுகாப்பு, சுகாதாரம், அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்கிய தரப்பினருக்கும் புனித தந்த தாதுவை வழிபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இறுதி தினமாக இன்றும் கூட தலதா வழிபாட்டில் இணைவதற்காக ஏராளமானவர்கள் தலதா மாளிகை வளாகத்தை அணுகியிருந்தனர், ஆனால் குறைந்த நேரமே இருந்ததால், அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்க முடியாது என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
யாத்திரிகர்கள் பலருக்கு புனித தந்த தாதுவை வழிபடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பலர் கண்ணீருடன் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றிருந்தனர்.
இதேவேளை, இன்று மாலை 5.30 மணிக்கு சிறி தலதா வழிபாட்டு நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து கண்டி நகரை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

