Apr 29, 2025 - 02:54 PM -
0
பாடசாலையில் இருந்து இடைவிலகிய அண்ணாவினாலேயே நான் இந்த நிலையை அடைந்தேன் என உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி ச.ருக்சிகா தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சையில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா 2ஏபி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 134 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், எனது பாடசாலை அதிபர் மற்றும் எனக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றிகள். எந்த நேரத்திலும் நாம் சந்தேகங்களை கேட்டாலும் ஆசிரியர்கள் எமது சந்தேகங்களை தீர்த்து வைத்தனர். அதனால் தான் இந்த இடத்தில் நிற்கின்றேன்.
வேறு மொழி பரீட்சை வினாத்தாள்களையும் ஆசிரியர்கள் கற்பித்தனர். பெற்றோரின் ஆதரவும் முக்கியமானது. எனது அப்பா விவசாயம் தான் செய்கிறார். என்னை சாதாரண தரத்தில் இருந்து படிக்க வைத்தது எனது அண்ணாதான். அண்ணா சாதாரண தரத்துடன் தனது படிப்பை நிறுத்திக் கொண்ட போதிலும் நான் படிக்க வேண்டும் என நினைத்து வேலைக்கு போய் என்னை படிக்க வைத்தான். அண்ணா இல்லை எனில் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.
--