Apr 29, 2025 - 04:13 PM -
0
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை, வளச் சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் மே தின நிகழ்வுகள் மன்னாரில் முன்னெடுக்கப்பட உள்ளதாக மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் வட மாகாண பொதுச் செயலாளர் நடராஜா தேவகிருஷ்ணன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று (29) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அடக்கு முறைக்கும் வளச் சுரண்டல்களுக்கும் எதிராக மே தினத்தை நினைவு கூறி வந்துள்ளோம். இந்த நிலையில் இலங்கை ரீதியாக உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அனைவரையும் ஒன்றினைத்து மே தின நிகழ்வை முதல் முதலாக சுரண்டல் மற்றும் அடக்கு முறைக்கு எதிராக மன்னார் நகரில் மே தின நிகழ்வை முன்னெடுக்க உள்ளோம். முதல் முதலாக மன்னாரில் நாங்கள் மே தின நிகழ்வை முன்னெடுக்கிறோம்.
மன்னாரில் வளச் சுரண்டல்கள் இடம்பெற்று வருவதோடு, மீனவர்கள் பாதிப்பு மற்றும் காணிகள் அபகரிப்பு என்பன மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை இந்திய ஒப்பந்தம், அமெரிக்கா, இலங்கை ஒப்பந்தம் வருகின்ற போது காற்றாலை திட்டங்கள் முன்னெடுக்கின்ற போது மீனவர்கள் வாழ்வாதாரங்கள் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படுகின்றது.
திட்டமிட்ட இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் காரணமாக எமது மீனவர்கள் பாரிய நெருக்கடியை சந்திக்கிறார்கள். மேலும் தொடர்ச்சியாக மன்னாரில் உள்ள வளங்களை சுரண்டுகின்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு இதற்கு எதிராக குரல் கொடுக்கும் வரையில் இலங்கையில் உள்ள விவசாயிகள், மலையக மக்கள், அனைவரும் ஒன்றிணைந்து மன்னார் நகரில் ஒன்று கூடி குறித்த திட்டங்களுக்கு எதிராகவும், மன்னார் மக்களுக்கு ஆதரவாகவும் மே தின பேரணி மற்றும் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
எதிர்வரும் 1 ஆம் திகதி மதியம் 3 மணிக்கு மன்னார் பஜார் பகுதியில் மே தின கூட்டம் இடம்பெற உள்ளது.
மே தின ஊர்வலம் அன்றைய தினம் மாலை 2 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும். பின்னர் அங்கு மே தின கூட்டம் இடம்பெறும்.
மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு மாயையான தோற்றத்தை உருவாக்கி உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஒரு தீர்வை முன்வைக்க ஜனாதிபதியினால் முடியும். அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதனையும் அவரால் கூற முடியும்.
மேலும் காணி அபகரிப்புகளும் பல்வேறு முறைகளில் இடம்பெற்று வருகின்றது.
நாட்டின் அனைத்து மாகாணங்களில் இருந்தும் மன்னாரில் இடம்பெற உள்ள மே தின ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் கலந்துகொள்ள மன்னாருக்கு வருகை தர உள்ளனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் வகையில் மே தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.