வடக்கு
மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகள்

May 1, 2025 - 05:47 PM -

0

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகள்

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இன்று [1] மே தின நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. 

அதனடிப்படையில் மன்னார் வங்காலை கிராம மக்கள், இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். 

குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்து மீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் குறித்த கிராம மக்கள் இன்று (1) மே தினத்தில் ஒன்று திரண்டு மிகவும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர். 

வங்காலை மீனவ சங்கம், மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் வங்காலை விளையாட்டு கழகம் கூட்டாக இணைந்து மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். 

வங்காலை கிராமத்தில் மீன்பிடி துறையில் அமைந்துள்ள சுரூபத்தடியில் இன்று(1)காலை காலை மே தின கொண்டாட்ட நிகழ்வு திருப்பலியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

குறித்த கிராம மக்கள் யாவரும் ஒன்று திரண்டு மீன்பிடி துறைமுகத்தில் போட்டி நிகழ்வுகளில் ஈடுபட்டனர். 

நீச்சல் போட்டி, பெரிய மற்றும் சிறிய படகுகளின் போட்டி , பெண்களுக்கான கயிறு இழுத்தல், சங்கீத கதிரை, சருக்கு மரம் ஏறல் உட்பட பல போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன. 

வங்காலை கிராமத்தின் கடற்படையினர் மற்றும் போலீஸ் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு பிரதி நிதிகளும் குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். 

இதே வேளை மன்னார் பேசாலை மீனவ கிராமத்திலும் மே தின நிகழ்வுகள் இடம் பெற்றது. 

பேசாலை கடற்கரையில் அமைந்துள்ள சூசையப்பர் சிற்றாலயத்தில் மே தின சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின் கடல் ஆசீர்வதிக்கப்பட்டு மே தின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05