May 2, 2025 - 01:24 PM -
0
இலங்கையில் தனியாருக்குச் சொந்தமான முதலாவது சர்வதேச விமான சேவையாகவும், குறைந்த கட்டணங்களுடனான விமானப் பயணங்களுக்கு முன்னணி நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்ற FitsAir, 2025 ஏப்ரல் 25 முதல் அமுலுக்கு வரும் வகையில், தனது பிராந்திய சேவை வலையமைப்பில் வணிக வகுப்பு (Business Class) சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. சிக்கனம் மற்றும் நம்பிக்கை என்ற அதன் பிரதான வாக்குறுதிக்கு அமைவாக, உயர்வான சிறப்பம்சங்களையும் உள்ளிணைத்து, FitsAir ன் வளர்ச்சிப் பயணத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனையாக இந்த நகர்வு மாறியுள்ளது.
தற்காலத்தில் வணிக நோக்கங்களுக்காக பிரயாணம் செய்கின்றவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ள இச்சேவை முன்னுரிமை அடிப்படையிலான check-in, விரைவான boarding வசதி, மற்றும் பிரயாணப் பொதிகளை விரைவாக கையாளுதல் போன்ற வசதிகளுடன், நெகிழ்வுடனான பிரயாண டிக்கட் மீள்முன்பதிவு மற்றும் இரத்துச் செய்யும் வாய்ப்புக்கள் போன்றவை அடிக்கடி பிரயாணம் செய்கின்றவர்களுக்கு சௌகரியத்தை மேம்படுத்துகின்றன. விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பதாக ஓய்வாகவும், சௌகரியமாகவும் இருப்பதற்கு உயர்மட்ட வசதிகள் கொண்ட ஓய்வறைகளையும் (lounge) அவர்கள் பயன்படுத்த முடியும்.
விமானப் பிரயாணத்தின் போது 40 கிலோ பிரயாணப் பொதியும், கையில் எடுத்துச் செல்வதற்கு 10 கிலோ பிரயாணப் பொதியும் தம்முடன் கொண்டு செல்லும் வகையில் தாராளமான வசதி வணிக வகுப்பு பிரயாணிகளுக்கு கிடைக்கப்பெறுவதுடன், தாம் விரும்புகின்ற ஆசனத்தை மேலதிக கட்டணமின்றி தெரிவு செய்தல், சிறப்பான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்ட தனிப்பட்ட பொழுதுபோக்கு சாதனங்கள் போன்றவையும் கிடைக்கப்பெறுகின்றன.
FitsAir நிறைவேற்றுப் பணிப்பாளர் அமர் காசிம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “குறைந்த கட்டணங்களில் விமானப் பிரயாண சேவையை வழங்கும் நிறுவனம் என்ற ரீதியில், விமானப் பிரயாணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களை அனைவருக்கும் கிடைக்கச்செய்வதில் நாம் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளோம். வணிக வகுப்பு சேவையை ஆரம்பித்து, நாம் அதனை மேலும் ஒருபடி மேற்கொண்டு சென்றுள்ளதுடன், சிக்கனமான கட்டணங்களுடன் பிரயாணம் செய்ய எண்ணுகின்றவர்களுக்கு, வழக்கமாக கூடுதல் கட்டணங்களுடன் கிடைக்கின்ற சௌகரியம், பிரத்தியேக அனுபவம் மற்றும் தனிப்பட்ட சேவை அனுபவத்தை நாம் வழங்குகின்றோம். தற்காலத்தில் பிரயாணிகளுக்கு கிடைக்கின்ற மதிப்பிற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கும் வகையில் இது அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
விமானப் பிரயாண அனுபவத்தை மேம்படுத்தி, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது சேவைகளை விரிவுபடுத்தும் FitsAir ன் குறிக்கோளுக்கு ஏற்ப, இயல்பான ஒரு மேம்பாடாக வணிக வகுப்பு சேவையின் அறிமுகம் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனையானது, மகத்தான தெரிவு, மிகச் சிறந்த மதிப்பு மற்றும் மேம்பட்ட சேவை மட்டம் ஆகியவற்றை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, இப்பிராந்தியத்தில் மிகவும் முக்கியமானதொரு விமான சேவை நிறுவனமாக மாற வேண்டும் என்ற அதன் இலக்கினை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. FitsAir இணையத்தளம், அங்கீகரிக்கப்பட்ட பிரயாண முகவர்கள் மற்றும் அழைப்பு மையம் ஆகியவற்றின் மூலமாக வணிக வகுப்பு டிக்கெட்டுக்களை தற்போது கொள்வனவு செய்ய முடியும்.

