ஏனையவை
குளிக்கச் சென்ற புதுமணப் பெண் மாயம் - ஒருவர் உயிரிழப்பு!

May 4, 2025 - 04:43 PM -

0

குளிக்கச் சென்ற புதுமணப் பெண் மாயம் - ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் - கங்கேவாடி பகுதியில் உள்ள கலாஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது மகளை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த தந்தை நீரில் மூழ்கி பரிதாமாக உயிரிழந்துள்ளார்.

 

மேலும், அண்மையில் திருமணமான மற்றுமொரு யுவதியொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.

 

இந்த சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது. புத்தளம் - கற்பிட்டி பகுதியை சேர்ந்த முஹம்மட் பரீன் (வயது 42) எனும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்துடன், கற்பிட்டி வன்னிமுந்தல், முஹம்மதியா புரம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா அப்சானா (வயது 22) எனும் திருமணமாகி 20 நாட்களேயான யுவதியே காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

கலாஓயா ஆற்றின் நீர்மட்டம் ஒரே தடவையில் அதிகரித்துள்ளமையே இந்த அனர்த்தத்திற்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 

சம்பவம் இடம்பெற்ற நேற்று உயிரிழந்த நபர் தமது குடும்பம் மற்றும் உறவினர்கள் என 8 பேருடன் இந்திரப் படகு ஒன்றில் கற்பிட்டியில் இருந்து வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கேவாடி பகுதியிலுள்ள ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்போது, உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் மகளும், அவரின் உறவினர் முறையை சேர்ந்த 22 வயதுடைய அண்மையில் திருமணமான யுவதியும் ஆற்றுக்குள் நீராடிக் கொண்டிருந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

 

இதன்போது, நீராடிக் கொண்டிருந்த குறித்த இளம் யுவதியை நீர் அடித்துச் செல்வதாக அங்கிருந்தவர்கள் கூக்குரலிட அதனை அவதானித்த தந்தை உடனடியாக ஆற்றுக்குள் பாய்ந்து நீரில் இழுத்துச் செல்லப்பட்ட தனது மகளை பாதுகாப்பான முறையில் மீட்டுள்ளார்.

 

இதனையடுத்து, தனது மகளோடு கூடவே இருந்து நீராடிக் கொண்டிருந்த அண்மையில் திருமணமான தனது உறவுமுறை யுவதியும் காணாமல் போயுள்ளமையை அவதானித்த அந்த குடும்பஸ்தர் மீண்டும் ஆற்றுக்குள் பாய்ந்த நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் நீரில் மூழ்கிய குடும்பஸ்தரை மீட்டு, உடனடியாக வன்னாத்தவில்லு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து சம்பவம் பற்றி வன்னாத்தவில்லு பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளன.

 

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்தில் மரண விசாரணையை முன்னெடுத்ததுடன், வன்னாத்தவில்லு பிரதேச வைத்தியாசலையில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாவை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 

இதனையடுத்து, உயிரிழந்த நபரின் ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர், நீரில் மூழ்கியமையினால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

 

வார விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு இவ்வாறு ஆறுகள், குளங்களுக்கு குளிப்பதற்காக செல்வோர் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும், விஷேடமாக சிறுவர்களை ஆறுகள், குளங்களுக்குள் குளிப்பதற்கு அனுமதிப்பதை குறைத்துக் கொள்ளுமாறும் இது விடயத்தில் மக்கள் தெளிவுபெற வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

 

மேலும், நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போயுள்ள யுவதியை தேடும் பணிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து நூற்றுக்கணக்கான இயந்திர படகுகளில் மீனவர்கள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பில் வன்னாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05