May 4, 2025 - 05:26 PM -
0
தயாரிப்பு நிறுவனமொன்றின் பெயர் மற்றும் தரநிலை சின்னத்தை போலியாக பயன்படுத்தி, டின் மீன் உற்பத்தியை முன்னெடுத்து வந்த இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, தலாஹேன, தூங்கல்பிட்டிய பகுதியில் டின் மீன்கள் தயாரிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நேற்று (03) சுற்றிவளைக்கப்பட்டது.
இலங்கை தர நிர்ணய சபையால் வழங்கப்பட்ட தரச் சான்றிதழ் மற்றும் உற்பத்தி நிறுவனமொன்றின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, அசுத்தமான மற்றும் ஒழுங்கற்ற முறையில் டின் மீன் பொதியிடல் நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சோதனையின் போது, சந்தைக்கு வெளியிடுவதற்காக போலியாக தயாரிக்கப்பட்ட 425 கிராம் நிகர எடை கொண்ட சுமார் 700 டின்களும், இவற்றை கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் இருந்த லொறியொன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில், கடந்த இரண்டு மாதங்களாக குறித்த இடத்தில் தயாரிக்கப்பட்ட தரமற்ற பொருட்கள் கம்பஹா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, மேற்படி விசாரணைகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

