May 5, 2025 - 07:18 PM -
0
இலங்கையின் 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) நடைபெறவுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. தேர்தல் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (05) ஆரம்பமாகியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை தவிர்ந்த 19 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 478,000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதில் 202 இடங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயல்படும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர், முடிவுகள் அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவிக்கப்படும். பின்னர், தெரிவான பிரதிநிதிகளின் பெயர்கள் உத்தியோகபூர்வமாக அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வெளியிடப்படும்.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் தங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க, விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வேட்பாளர்களின் முகவர்கள், பொலிஸார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 4:00 மணிக்கு முடிவடையும். மாலை 4:00 மணிக்கு வரிசையில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும். அதற்குப் பின்னர், வாக்களிப்பு நிலையங்களுக்கு புதிதாக யாரையும் அனுமதிக்க முடியாது என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட செயலாளருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின்படி, வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள்: தொட்டுணரக்கூடிய ஸ்டென்சில் சட்டகம் மூலம் வாக்குச்சீட்டில் சுயமாக வாக்களிக்க வசதி.
சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்: வாக்குச்சாவடிக்குள் எளிதாக நுழையவும், குறைந்த உயரத்தில் வாக்குப் பெட்டிகளை அணுகவும் ஏற்பாடு.
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடி/லென்ஸ்: வாக்களிக்க இவற்றைப் பயன்படுத்த வசதி.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையானது வாக்களிப்பவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளும் படியும் வாக்குச் சாவடி பொறுப்பதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
--