May 7, 2025 - 09:47 AM -
0
இந்தியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50 இற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 9 இலக்குகளும் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதலை 'போர் நடவடிக்கை' எனக் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இந்தியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஐந்து இடங்களில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிட்டுள்ள ஷெபாஸ் ஷெரிஃப், "இந்தப் போருக்கு வலுவான பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு. எதிரியை எப்படி சமாளிப்பது என்பது பாகிஸ்தான் தேசத்திற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் நன்றாகத் தெரியும். எதிரி தனது தீங்கிழைக்கும் நோக்கங்களில் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவின் பொறுப்பற்ற நடவடிக்கை அணு ஆயுதங்கள் இரண்டு நாடுகளையும் ஒரு பெரிய மோதலுக்கு தள்ளியிருக்கிறது. மேலும், ஏவுகணைத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

