May 7, 2025 - 02:25 PM -
0
கத்தோலிக்க மத தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21 ஆம் திகதி உடல்நல குறைவால் நித்திய இளைப்பாறினார். இதனையடுத்து பரிசுத்த பாப்பரசரின் உடல் ரோமில் உள்ள புனித மேரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பரிசுத்த பாப்பரசர் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான மாநாடு இன்று (07) முதல் இடம்பெறும் என வத்திக்கான் அறிவித்தது. அதன்படி இன்று புதிய பாப்பரசர் தெரிவு இடம்பெறும் என அறியமுடிகிறது. வத்திக்கானில் உள்ள 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடக்கிறது.
இதற்காக வத்திக்கானில் 250 கர்த்தினால்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கர்த்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசர் தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கர்த்தினால்கள் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்வதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து இரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள்.
கர்த்தினால்களை தவிர இரண்டு அவசர கால வைத்தியர்கள், கர்த்தினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கர்த்தினால்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து வத்திக்கானில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்படும். சிஸ்டைன் தேவாலயத்திற்கு உள்ளேயும் வெளி பகுதியிலும் தொலைபேசி மற்றும் இணைய தொடர்புகளை தவிர்க்க ஜாமர்கள் பொருத்தப்பட்டிருக்கும். கர்த்தினால்கள் தங்கும் மாளிகையிலும் தொலைக்காட்சி, வானொலி, செய்திதாள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய பாப்பரசராக தேர்வு செய்யப்படுபவருக்கு 3/2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடை பெறும். ஒவ்வொரு கர்த்தினால் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.
இந்த நடைமுறைகளுக்கு பின்னர் சிஸ்டைன் தேவாலயத்தில் அண்மையில் பொருத்தப்பட்ட புகை போக்கியில் கருப்பு நிற புகை வெளியிடப்பட்டால் புதிய பாப்பரசர் தேர்வு செய்யப்படவில்லை என்பதை குறிக்கும்.
வெள்ளை நிற புகை வந்தால் புதிய போப் பாப்பரசர் செய்யப்பட்டதை குறிக்கும். புதிய பாப்பரசர் தேர்வு செய்ய கர்த்தினால்கள் வாக்கு செலுத்திய சீட்டுகள் உடனடியாக எரிக்கப்படும்.

