வணிகம்
BMPC விருது 2025 இல் இரட்டை அங்கீகாரத்தைப் பெற்ற INSEE Ecocycle

May 14, 2025 - 04:59 PM -

0

BMPC விருது 2025 இல் இரட்டை அங்கீகாரத்தைப் பெற்ற INSEE Ecocycle

இலங்கை பட்டய தொழில்சார் முகாமையாளர் நிறுவனத்தினால் (CPM) ஏற்பாடு செய்யப்பட்ட BMPC விருது 2025 நிகழ்வில் இலங்கையில் நிலையான கழிவு முகாமைத்துவத்தின் முன்னணியாளரான INSEE Ecocycle Lanka (தனியார்) நிறுவனம் கௌரவத்திற்குரிய இரட்டை அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்வு கோட்டை, ஸ்ரீஜயவர்த்தனபுர மொனார்க் இம்பீரியஸ் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. 

சிறப்பாகச் செயற்பட்ட இருபது நிறுவனங்களில் ஒன்றாக INSEE Ecocycle நிறுவனம் பெயரிடப்பட்டிருப்பதுடன், வலு மற்றும் சக்தி-வெப்பம் (எரிபொருள், நிலக்கரி மற்றும் எரிவாயு) பிரிவில் இதற்கு விருது வழங்கப்பட்டது. நிலைபேறான மற்றும் வினைத்திறனான வலுசக்தித் தீர்வுகளை வழங்குவதில் தொழில்துறையின் முன்னோடி என்ற ரீதியில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரங்கள் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைகின்றன. 

INSEE Ecocycle நிறுவனத்தின் பணிப்பாளர் சுஜித் குணவர்தன குறிப்பிடுகையில், “சிறப்புத் தன்மை மற்றும் நிலைபேறான தன்மை ஆகியவை தொடர்பில் எமது அணியினர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு இந்த இரட்டை அங்கீகாரம் சான்றாக அமைகின்றது. கழிவு முகாமைத்துவத்தில் INSEE Ecocycle நிறுவனம் கொண்டிருக்கும் தொழில்துறை நெறிமுறை மற்றும் நிலைபேறு தன்மை நோக்கிய பயணத்திற்கு வழங்கிவரும் தலைமைத்துவம் என்பவற்றுக்கான சிறந்த உதாரணங்களாக இந்த அங்கீகாரங்கள் அமைகின்றன. கடந்த இரு தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட INSEE Ecocycle நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இந்த வெற்றி உரித்தானதாகும்” என்றார். 

சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, செயற்பாடுகளில் நிலைப்புத் தன்மையை மேம்படுத்தல் மற்றும், புத்தாக்கம், சிறப்பு, சூழலுக்குப் பொறுப்புக் கூறுதல் ஆகிய நிறுவனத்தின் பிரதான நோக்கங்களுக்கு இணங்கும் வகையில் INSEE Ecocycle நிறுவனம் இயங்குவதை இந்த அங்கீகாரங்கள் மீள் உறுதிப்படுத்தியுள்ளன. 

இலங்கையின் பொறுப்பு வாய்ந்த வணிக நடைமுறைகளுக்கு முன்னோடி என்ற INSEE Ecocycle நிறுவனத்தின் ஸ்தானத்தை அந்த அங்கீகாரங்கள் மேலும் வலுப்படுத்துகின்றன. அத்துடன், செயல்திறன் மற்றும் நிலையான நடைமுறைகளுக்கு அமைய முதலீடுகள் சரியான வகையில் பயன்படுத்தப்படுகின்றன என்ற சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாண்மையைக் கொண்டுள்ளவர்களுக்கு வழங்குவதாகவும் இவை அமைகின்றன. 

கடந்த வருடம் INSEE Ecocycle நிறுவனம் முகாமைத்துவ நடைமுறைகளுக்காக CPM Sri Lanka நிறுவனத்திடமிருந்து பாராட்டையும், மெரிட் விருதையும் வெற்றிருந்தது. BMPC விருதுகள் இலங்கையில் செயல்பாட்டு சிறப்பிற்கான ஒரு அளவுகோலாக அங்கீகரிக்கப்படுவதுடன், முகாமைத்துவ நடைமுறைகள், புத்தாக்கம் மற்றும் நிலைபேறான செயற்பாடுகள் போன்ற கடுமையான அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்த விருது விழாவில் INSEE Ecocycle நிறுவனத்திற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமானது அதன் செயற்பாட்டுத் திறன் பேணுகை, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நடைமுறைகளை செயல்படுத்துவதில் நிறுவனத்தின் தலைமைத்துவம் என்பவற்றைப் பறைசாற்றுகின்றது.

Comments
0

MOST READ