வணிகம்
சிங்கர் கிளை வலையமைப்பு வழியாக டிஜிட்டல் ரீதியில் வாடிக்கையாளர்களை உள்வாங்கும் முயற்சியை ஹட்ச் விரிவுபடுத்தியுள்ளது

May 16, 2025 - 11:24 AM -

0

சிங்கர் கிளை வலையமைப்பு வழியாக டிஜிட்டல் ரீதியில் வாடிக்கையாளர்களை உள்வாங்கும் முயற்சியை ஹட்ச் விரிவுபடுத்தியுள்ளது

டிஜிட்டல் மாற்றத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்களுக்கான சௌகரியத்தை மேம்படுத்துவதற்கும் ஏதுவான ஒரு நடவடிக்கையாக, நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களைப் பொறுத்தவரையில் இலங்கையின் முன்னணி விற்பனையாளராகத் திகழ்ந்து வருகின்ற சிங்கருடன் பேணி வருகின்ற கூட்டாண்மையை ஹட்ச் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், eSIM தொழில்நுட்பத்தை பரந்த அளவில் கிடைக்கச் செய்யவும், நாடு முழுவதும் உள்ள மொபைல் பயனர்களுக்கு டிஜிட்டல் முறையில் நெறிப்படுத்தப்பட்ட உள்வாங்கல் சேவையை வழங்கவும் முடியும். 

இந்த முழுமையான டிஜிட்டல் வழிமுறை உள்வாங்கல் கட்டமைப்பானது, மனிதரீதியான செயல்முறைகள் மற்றும் பல தடவைகள் சேவை மையத்திற்கு வருகை தர வேண்டிய தேவைகளைப் போக்கி, விரைவான, ஆவண படிவங்களற்ற அனுபவத்தை உறுதி செய்கிறது. காட்சியறையில் eSIM ஒன்றை செயல்படுத்திக் கொள்வதானாலும் சரி அல்லது வழக்கமான SIM அட்டையொன்றைப் பெற்றுக் கொள்வதானாலும் சரி, இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையின் எளிமை மற்றும் செயல்திறனைப் பிரதிபலிக்கும் வகையில் தங்குதடையற்ற செயல்முறையை வாடிக்கையாளர்கள் இப்போது அனுபவிக்க முடியும். 

இந்த செயல்முறை முழுமையாக டிஜிட்டல் ரீதியானதாக மற்றும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி காட்சியறையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், ஹட்ச் டிஜிட்டல் தளத்திற்கு வழிநடாத்திச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் உடனடியாக eSIM ஒன்றை செயல்படுத்திக் கொள்ளலாம் அல்லது உங்கள் வீட்டுக்கே நேரடியாக விநியோகிக்குமாறு SIM அட்டையொன்றுக்கான விண்ணப்பத்தை விரைவாக பூர்த்தி செய்து கொள்ளலாம். இது மீண்டும் மீண்டும் வர வேண்டிய சிரமங்கள், ஆவண படிவங்கள் அல்லது மனிதரீதியாக கையாள்வதற்கான தேவையைப் போக்குகின்றது. இது தற்காலத்தில் தொழில்நுட்பரீதியில் இணைக்கப்பட்ட நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, எவ்விதமான சிரமங்களுமின்றி வாடிக்கையாளர்களை உள்வாங்கும் அனுபவத்தை உறுதி செய்கிறது. 

கிடைக்கும் வசதி மற்றும் சிக்கனம் ஆகியவற்றுக்கு அப்பால், இந்த கூட்டாண்மையானது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மொபைல் சேவை விநியோகத்தின் ஒரு புதிய சகாப்தத்தை மலரச் செய்துள்ளது. ஸ்மார்ட்போன்களை வாங்கவும், அவற்றுக்கு மொபைல் இணைப்பைப் பெறவும் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு இடங்களுக்கு இனி மேலும் அலைய வேண்டியதில்லை. ஹட்ச் மற்றும் சிங்கர் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஒட்டுமொத்த அனுபவத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஹட்ச் நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்ப இணைப்புத் தீர்வுகளை சிங்கரின் நாடளாவிய விற்பனை வலையமைப்புடன் இணைப்பதன் மூலம், சாதனமொன்றை வாங்குவதிலிருந்து மொபைல் வலையமைப்பொன்றின் கீழ் அதனை செயல்படுத்தல் வரையிலான ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நெறிப்படுத்தி, மொபைல் தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்திலேயே நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பினை இக்கூட்டாண்மை வழங்குகிறது. மேலும், இந்த ஒத்துழைப்பானது ஹட்ச் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக நன்மைகளைக் கொண்டுவருகிறது. இதில் டிஜிட்டல் ரீதியான உள்ளடக்கத்தை விரைவுபடுத்துவதற்கும், அதிநவீன தொழில்நுட்பத்தை மேலும் இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுவதற்கும், HONOR மற்றும் ZTE வர்த்தகநாமங்களின் கீழ் அடிப்படை ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கான விசேட தள்ளுபடிகளும் உள்ளடங்கியுள்ளன. 

ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “டிஜிட்டல் சகாப்தத்தில் மக்களுக்கு வலுவூட்டுவதிலும், அவர்களுடைய வாழ்க்கையை மாற்ற வல்லமை படைத்த டிஜிட்டல் சேவைகளை அவர்கள் கைக்கொள்ள உதவுவதிலும் ஹட்ச் நிறுவனத்தில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். சிங்கருடனான எங்கள் கூட்டாண்மை, உடனடி eSIM இணைப்பைப் பெறுதல், QR ஆற்றலுடனான SIM விநியோகம் அல்லது சலுகை அடிப்படையில் முதன்முதலாக ஸ்மார்ட்போன் பாவனைக்கு மாறிக்கொள்ளுதல் என எதுவாக இருந்தாலும், மொபைல் வசதியை விரிவுபடுத்துதல் மற்றும் எளிதாக்குதல் குறித்த பயணத்தில் இது குறிப்பிடத்தக்கதொரு படியாகும். இவை அனைத்தும் வாடிக்கையாளர்கள் முன்னேற உதவுவது சார்ந்த முயற்சிகளாகும்," என்று குறிப்பிட்டார். 

சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜன்மேஷ் அந்தனி அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சௌகரியத்தை வழங்குவதற்கு சிங்கர் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. ஹட்ச் உடனான கூட்டு, மதிப்பு அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் பகிரப்பட்ட குறிக்கோளை மேலும் வலுப்படுத்துகிறது. உயர் வகை மொபைல் சாதனங்கள் மற்றும் தங்குதடையற்ற தொழில்நுட்ப இணைப்பு இரண்டையும் வாடிக்கையாளர்கள் தற்போது ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலாம், என்று குறிப்பிட்டார். 

டிஜிட்டல் ரீதியாக வாடிக்கையாளர்களை உள்வாங்குவதை மையமாகக் கொண்டு, சேவைகள் கிடைக்கப்பெறும் வழிமுறைகளை விரிவுபடுத்துதல், சௌகரியத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை எங்கிலும் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள மதிப்பை வழங்குதல் ஆகியவற்றுக்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்த முயற்சி மேலும் உறுதிப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் எவ்வாறு தொழில்நுட்பத்தின் மூலமாக இணைக்கப்படுகிறார்கள் என்பதை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், ஹட்ச் மற்றும் சிங்கர் ஆகியன ஒன்றிணைந்து மொபைல் சேவை விநியோகத்தின் எதிர்காலத்தைச் செதுக்குகின்றன. 

ஹட்ச் ஸ்ரீலங்கா தொடர்பான விபரங்கள் 

ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Fortune 500 நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings (CKHH) இன் துணை நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்கா, இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முக்கியமான செயல்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுவதுடன், தொலைதொடர்பாடல் உள்ளடங்கலாக ஆறு பாரிய துறைகளில் செயல்பட்டுவருவதுடன், 2023 ம் ஆண்டில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை CKHH பதிவாக்கியுள்ளது. 

1997 ம் ஆண்டில் இலங்கை சந்தையில் காலடியெடுத்து வைத்த ஹட்ச், 2004 ம் ஆண்டில் GSM சேவையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2011 இல் 3G மற்றும் 2018 இல் 4G என தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்தது. 2019 இல் எடிசலாட் ஸ்ரீலங்கா (Etisalat Sri Lanka) நிறுவனத்தை கொள்முதல் செய்தமை ஹட்ச்சின் சந்தை ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், 078 மற்றும் 072 என ஆரம்பிக்கும் தொலைபேசி இணைப்பு இலக்கங்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன், நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. ஹட்ச்சின் 4G வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 95% ஐ உள்ளடக்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் அபிலாஷைகளை அடைவதற்கு உதவும் வகையில் 5G சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்நிறுவனம் தயாராக உள்ளது. 

சிக்கனமான கட்டணங்களுடன், நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் கூட தொடர்பாடல், வணிக செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வாய்ப்பைப் பெறும் வகையில் நம்பகமான இணைப்புத்திறனை வழங்கி, தனது சேவைகளை ஹட்ச் விரிவுபடுத்தி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05