May 17, 2025 - 09:52 AM -
0
மே மாதம் சுவீடன் ஸ்டாக்ஹோம் என்னும் இடத்தில் 12 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இடம்பெற்ற அமைதி மற்றும் மேம்பாட்டு மன்றம் 2025 என்னும் கருத்தரங்கில் விசேட அழைப்பின் பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்து கொண்டார்.
அதன் போது இலங்கையிலிருந்து வழக்கு ஆய்வு என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கூட்டு உருவாக்கம் மூலம் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் என்னும் ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சாளராக பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய அவர்,
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற அநீதிகள் இன படுகொலைகள் மற்றும் அரசியல் கொலைகள் சம்பந்தமான சர்வதேச பார்வையானது குறைவடைந்துள்ளது. இதற்கான காரணம் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னரும் உலகில் பல பகுதிகளில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வகை மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் சில நாடுகளில் இடம்பெற்றன இடம்பெற்று வருகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்க நாடுகள் இராக், சிரியா, மியான்மார், ரஷ்யா, இஸ்ரேல், உக்ரைன், பாலஸ்தீனம். இந்நாடுகள் அனைத்தும், யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையதாக சர்வதேச அமைப்புகளால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்னுரிமை காரணமாக இலங்கையில் இடம்பெற்றவற்றுக்கான கரிசனை குறைவாக காணப்படுகின்றது.
இன்றளவில் யுத்தம் மெளனிக்கப்பட்டும் நாட்டின் அரசியல் நிலைமை பொருளாதாரம் என்பன இஸ்தீரணமற்றுக் காணப்படுகின்றது அதிலும் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குறியாகவே உள்ளது.
இருப்பினும் சர்வதேசத்தின் பார்வை எமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் அழுத்தமாக பட வேண்டும் ஆரோக்கியமான பொருளாதார பலம்மிக்க நீதியான நாட்டை கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் அழுத்தம் மிக இன்றி அமையாததாக காணப்படுகின்றது என தெரிவித்தார்.
இவ் கருத்தரங்கில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பல அரசியல் பிரமுகர்கள் உட்பட உலக வங்கி, IMF நானய நிதி உறுப்பினர்கள் மற்றும் பல உலக அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பங்கெடுத்திருந்தார்கள்.

