May 17, 2025 - 01:15 PM -
0
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி 8 நாட்களுக்கு பிறகு இன்று (17) மீண்டும் ஆரம்பமாகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் இந்தப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். கொல்கத்தா தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
போர் சூழல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டபோது பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டனர். அவர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்குள் மீண்டும் திரும்ப தயக்கம் காட்டினார்கள். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தம் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.
அதன்படி 57 வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் ஆடுகிறார்கள். மும்பை அணியில் 8 பேரும், குஜராத், பெங்களூரு தலா 7, கொல்கத்தா, ராஜஸ்தான் தலா 6, பஞ்சாப், ஐதராபாத், லக்னோ தலா 5, டெல்லி, சென்னை தலா 4 பேரும் ஐ.பி.எல்.லில் விளையாட இந்தியாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
இவர்களில் சிலர் தங்களது நாடுக்கான போட்டியில் பங்கேற்பதால் பிளே ஆப் சுற்றில் ஆட மாட்டார்கள்.
ஸ்டார்க், ஹசில்வுட், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்டோய்னிஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரண் உள்ளிட்ட சில வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.லில் மீண்டும் ஆடவில்லை.
மாற்று வீரர்களாக ஒப்பந்தமான பேர்ஸ்டோவ், முஷ்தாபிசுர் ரகுமான், குசால் மெண்டிஸ், ஜேமிசன், ரிச்சர்டு கிளீசன், வில் ஓ ரூர்க் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்கள்.

