May 19, 2025 - 07:06 PM -
0
ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லியை குஜராத் அணி வீழ்த்தியதன் மூலம் குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஆர்சிபி அணியில் லுங்கி நிகிடி இடம் பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி ஜூன் 11 ஆம் திகதி தொடங்க இருக்கிறது. இதனால் லுங்கி நிகிடி பிளேஆஃப் சுற்றில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த முசாரபானியை தேர்வு செய்துள்ளதை ஆர்சிபி உறுதி செய்துள்ளது. பிளேஆஃப் சுற்றுக்காக மட்டும் தற்காலிகமாக 75 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
முசாரபானி 70 டி20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கான 12 டெஸ்ட் மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி வருகிற 22 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் முடிவடைந்த பின்னர் ஆர்சிபி அணியில் முசாரபானி இணைய உள்ளார்.

