May 21, 2025 - 08:15 AM -
0
DFCC வங்கியானது, வரிக்குப் பின்னரான இலாபமாக 2.9 பில்லியன் ரூபாயும், மொத்த சொத்துக்கள் 8 வீதத்தால் அதிகரித்து 765 பில்லியன் ரூபாயாகவும் பதிவுசெய்து, 2025ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் மீள்தன்மையையும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. வங்கியின் வரிக்குப் பின்னரான இலாபம் 7.8 பில்லியன் ரூபாயாக காணப்பட்டது. Acuity Partnersஇல் அதன் 50 வீதமான பங்குகளை மூலோபாய அடிப்படையில் விற்பனை செய்ததன் மூலம் இதனை அடைந்துள்ளது.
வட்டி விகிதங்கள் குறைந்து கொண்டிருந்தாலும், நடைமுறைக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகைகள் மேம்பட்டதாலும், வங்கி விகிதங்களை திறம்பட சீர்செய்ததாலும், நிகர வட்டி வருமானத்தில் 5 வீத அதிகரிப்புடன், வங்கியின் பிரதான செயற்பாடுகள் வலுவாகக் காணப்பட்டன. நடைமுறைக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு விகிதம் 26.47 வீதமாக உயர்ந்துள்ளதோடு, நிகர வட்டி வருமானம் 7.4 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. பணம் அனுப்பும் செயற்பாடு அதிகரித்தமை மற்றும் கடனட்டை பயன்பாட்டின் விரிவாக்கம் ஆகிய காரணங்களால், வங்கியின் கட்டணம் மற்றும் தரகு வருமானம் கடந்த வருடத்தை விட 24 வீதத்தால் அதிகரித்துள்ளது.
போதுமான மூலதன மற்றும் பணப்புழக்க நிலைகளும் வலுவாகக் காணப்பட்டன. வங்கியின் அடுக்கு 1இன் (tier 1) விகிதம் 10.89 ஆகவும், மொத்த மூலதன விகிதம் 13.50 ஆகவும் உள்ளது. இவை வங்கி தொடர்பான சட்ட விதிகளால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவுகளை விட மிக அதிகமாகும். பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் 255.07 ஆகவும், நிகர நிலையான நிதி விகிதம் 118.15 ஆகவும் பதிவாகி, பணப்புழக்கம் வலுவாக காணப்பட்டது.
கொழும்பு பங்குச் சந்தையில் ஆரம்பத்தில் பட்டியல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, லக்சம்பர்க் பசுமைப் பரிவர்த்தனையில் இலங்கையின் முதல் பசுமைப் பத்திரமாக இரட்டைப் பட்டியலிடப்பட்டமை, இந்த காலாண்டில் பெற்றுக்கொண்ட ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த நடவடிக்கையானது, நிலையான நிதியளிப்பில் DFCC வங்கியின் தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, புதுப்பிக்கத்தக்க சக்திவள மேம்பாட்டிற்கான வங்கியின் அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டுகின்றது.
நோக்கத்துடன் கூடிய முன்மொழிவுகள் மூலம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை வங்கி தொடர்ந்தும் மேம்படுத்தி வருவதாக DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமல் பெரேரா குறிப்பிட்டார். இவற்றில் வீட்டு உரிமை, இடமாற்ற நிதி, தங்கக் கடன் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பணம் அனுப்பும் சேவைகள் ஆகியவை உள்ளடங்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். DFCC வங்கி தனது 70ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த தருணத்தில், நீண்டகால மதிப்பை உருவாக்குதல், நிதி உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

