May 21, 2025 - 08:24 AM -
0
கொமர்ஷல் வங்கி குழுமமானது 2025 ஆம் ஆண்டை சிறப்பான முறையில் நகர்த்திச் செல்லும் வகையில் வலுவான ஆரம்பமாக ஆண்டின் முதல் காலாண்டில் ஆரோக்கியமான இலாபம் மற்றும் ஐந்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கையின் மிகப்பாரிய தனியார் துறை வங்கி, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களை உள்ளடக்கிய இந்தக் குழுமமானது கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் (CSE) சமர்ப்பித்த அறிக்கையில், 2025 மார்ச் 31 ஆம் திகதி முடிவுற்ற ஆண்டின் முதலாவது காலாண்டில் அதன் சொத்துக்கள் ரூ.2.999 டிரில்லியனை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
காலாண்டில் மொத்த வருமானமானது 9.85% ஆல் அதிகரித்து ரூ.88.10 பில்லியனாகவும், வட்டி வருமானமானது 3.14% ஆல் அதிகரித்து ரூ.72.60 பில்லியனாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த வட்டி விகித ஆட்சியின் மத்தியில் கடன்கள் மீள் பரிசீலனை செய்யப்பட்டதன் விளைவாக வட்டி செலவுகள் 10.09% ஆல் குறைந்து ரூ.38.38 பில்லியனாக உள்ளது. இதனால் நிகர வட்டி வருமானத்தில் 23.53% வளர்ச்சி ஏற்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட்ட மூன்று மாத காலப்பகுதியில் இது ரூ.34.21 பில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த செயல்பாட்டு வருமானமானது 33.40% ஆல் அதிகரித்து ரூ.46.62 பில்லியனாக உள்ளது. எனினும் குழுவின் குறைபாட்டு கட்டணங்கள் மற்றும் பிற இழப்புகளுக்கான ஒதுக்கீடானது 110.44% ஆல் அதிகரித்து ரூ.7.23 பில்லியனை பதிவு செய்துள்ளது. தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு விவேகமான அடிப்படையில் மேலதிக ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் விளைவாக வங்கியின் குறைபாட்டுக் கடன்கள் (நிலை 3) விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதன் விளைவாக, மூன்று மாதங்களுக்கான நிகர செயற்பாட்டு வருமானமானது, ரூ.39.39 பில்லியனாக, 25.00% வளர்ச்சியைப் பிரதிபலித்தது. அதே வேளை, செயற்பாட்டுச் செலவுகளை ரூ.12.80 பில்லியனாகக் கட்டுப்படுத்தும் குழுவின் திறன் காரணமாக, வெறும் 6.20% அதிகரிப்புடன், நிதியியல் சேவைகளுக்கான வரிகளுக்கு முந்தைய செயற்பாட்டு இலாபம் 36.64% இனால் அதிகரித்து ரூ.26.59 பில்லியனாக உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதியியல் சேவைகளுக்கான வரிகள் 48.18%ஆல் அதிகரித்து ரூ.4.03 பில்லியனாக உயர்ந்ததன் விளைவாக மூன்று மாதங்களுக்கு குழுமத்தின் வரிக்கு முந்தைய இலாபம் ரூ.22.56 பில்லியனாக உயர்ந்தது, இது 34.77% அதிகரிப்பாகும். வருமான வரி 27.92% அதிகரித்து ரூ.7.58 பில்லியனாக உயர்ந்துள்ளது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் குழுமத்தின் நிகர இலாபம் ரூ.14.97 பில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இது 38.52% கீழ்நிலை வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
தனித்தனியாக எடுத்துக்கொண்டால், கொமர்ஷல் வங்கியானது மூன்று மாதங்களுக்கு வரிக்கு முந்தைய இலாபமாக ரூ.21.88 பில்லியனையும், வரிக்கு பிந்தைய இலாபமாக ரூ.14.50 பில்லியனையும் பதிவு செய்துள்ளது, இது முறையே 35.10% மற்றும் 38.71% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த பெறுபேறுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் குழுமம் விதிவிலக்காக சிறப்பாகச் செயல்பட்டது, இது வர்த்தக அளவுகளின் அடிப்படையில் மட்டுமல்லாது தனியார் துறை வங்கிக் குழுமமானது முதல் தடவையாக ரூ.3 டிரில்லியன் சொத்துக்கள் என்ற மைல்கல்லை நெருங்கியமை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். எனினும் வங்கியின் குறைபாட்டுக் கடன்கள் (நிலை 3) விகிதம் குறைந்துள்ளதுடன் அதேவேளை மற்றும் நிகர வட்டி வரம்பு ஐந்தொகை வளர்ச்சியுடன் இணைந்து மேம்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க தெரிவிக்கையில், முதலாவது காலாண்டில் குழுமமானது அதன் கடன் புத்தகத்தில் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளதுடன் 2024 ஆம் ஆண்டின் போக்கைத் தொடர்கிறது; முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் வர்த்தகத்தில் ஏற்பட்ட ரூ.1.9 பில்லியன் நிகர இழப்பை மாற்றியுள்ளது; அத்துடன் நிகர பிற செயற்பாட்டு வருமானத்தை கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது, மேலும் நிலையான வைப்புகளுக்கான அதிக தேவை இருந்தபோதிலும் சிறந்த CASA விகிதத்தை தொடர்ந்து பராமரித்து வருகிறது. இவை எமது வர்த்தகத்தின் பல்வேறு அம்சங்களில் எமது கவனத்தை வெளிப்படுத்துகிறது. இவை அனைத்தும் எமது வலுவான முதல் காலாண்டு முடிவுகளுக்கு பங்களித்துள்ளன, அதே வேளை எதிர்கால வளர்ச்சிக்கு மீள்தன்மையை உருவாக்கியுள்ளன, என்று அவர் கூறினார்.
மார்ச் 31, 2025 நிலவரப்படி மதிப்பாய்வு செய்யப்பட்ட மூன்று மாதங்களில் குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ.122.85 பில்லியன் அல்லது 4.27% அதிகரித்து ரூ.2.999 டிரில்லியனை எட்டியுள்ளது. குழுமத்தின் மொத்த கடன்கள் மற்றும் முன்பணங்கள் ரூ.1.642 டிரில்லியனாகும், இது ரூ.116.75 பில்லியன் அல்லது மூன்று மாதங்களில் 7.65% வளர்ச்சியாகும், இது மாதாந்தம் சராசரி ரூ.38.92 பில்லியனாகும். முந்தைய 12 மாதங்களில் கடன் புத்தக வளர்ச்சி ரூ.326.02 பில்லியனாக இருந்தது, அத்துடன் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 24.77%, மாதத்திற்கு சராசரியாக ரூ.27.17 பில்லியனாக இருந்தது.
இதற்கிடையில், மீளாய்வு செய்யப்பட்ட மூன்று மாதங்களில் வைப்புத்தொகையானது ரூ.105.82 பில்லியன் அல்லது 4.59% அதிகரித்து ரூ.2.412 டிரில்லியனாக உள்ளது. இதன் மாதாந்த சராசரி வளர்ச்சி ரூ.35.27 பில்லியனாகவும், ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 12.67% ஆகவும் உள்ளது. 12 மாதங்களில் மாதாந்த சராசரி வளர்ச்சி ரூ.22.60 பில்லியனாக உள்ளது.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

