May 21, 2025 - 04:01 PM -
0
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (21) உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சந்தேகநபரிடம் இன்று (21) வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்த நிலையில், பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
சந்தேகநபர் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் என்றும், அவர் முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியவர் என்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தனர்.
சந்தேகநபர் தனது கையொப்பத்துடன் கூடிய பட்டியலை அமைச்சக செயலாளரிடம் சமர்ப்பித்து, அமைச்சரின் பிரத்தியேக பணியாளர்களாக 15 நபர்களை பரிந்துரைத்து அவர்களை நியமிக்க கோரியதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
குறித்த 15 பேரும் அமைச்சில் ஒருபோதும் பணியாற்றவில்லை என்றும், அவர்கள் அந்தப் பதவிகளுக்கு பெயரளவில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அனைத்தும் பிலிமதலாவ பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணைகளின் போது இந்தப் பணம் பின்னர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அமைச்சரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பெயரளவில் நியமிக்கப்பட்ட நபர்களின் அனைத்து கொடுப்பனவுகளும் இந்த சந்தேக நபரால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
சந்தேக நபரும் ஏனைய குழுவும் இணைந்து இந்த சட்டவிரோத செயலைச் செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேக நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதவானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இருப்பினும், சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காஞ்சன ரத்வத்தே, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாகக் கூறினார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிப்பது போன்று, இந்த சம்பவத்தின் மூலம் தனது நன்கொடையாளரின் கணக்கிற்கு எந்தப் பணமும் மாற்றப்படவில்லை என்றும், தற்போதுள்ள சட்ட நிபந்தனைகளுக்கு இணங்கவே செயல்பட்டதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
அதன்படி, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

