May 28, 2025 - 06:18 PM -
0
தமது தொழிலில் சற்று இடைவெளியை எடுத்த பின்னர் மீண்டும் பணிக்குழாமிற்கு திரும்புவதற்கு தயாராகவுள்ள பெண்களுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு முயற்சியான “SheResumes” என்பதை அலியான்ஸ் லங்கா பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் தமது தொழில் வாழ்வின் மீண்டும் வெற்றிகரமாகக் காலடியெடுத்து வைப்பதற்குத் தேவையான கருவிகள், திறன்கள் மற்றும் தன்னம்பிக்கையை வழங்குவதில் இந்நிகழ்ச்சித்திட்டம் கவனம் செலுத்தியுள்ளது.
தமது தொழிலிலிருந்து சற்று இடைவெளியை எடுத்துக் கொண்ட பின்னர் பெண்கள் முகங்கொடுக்கின்ற சவால்களை இனங்கண்டு கொண்ட அலியான்ஸ் லங்கா, கட்டமைக்கப்பட்ட மீள்-திறன் மேம்பாடு, தொழில் வழிகாட்டல், மற்றும் தொழில் தேடுவதற்கான ஆதரவு ஆகியவற்றை வழங்குகின்றது. பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய திறன்களை இதில் பங்குபற்றுபவர்கள் பெற்றுக்கொள்வதுடன், தொழில் வாய்ப்புக்கள் மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கும் நிறுவன கூட்டாளர்களைக் கொண்ட வலையமைப்புடன் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிகிடைக்கின்றது.
“SheResumes” என்பது வெறுமனே ஒரு தொழில் நிகழ்ச்சித்திட்டத்திற்கும் அப்பாற்பட்டது என்பதுடன், பெண்களுக்கு வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதை நோக்கிய ஒரு படியாகவும், பணிக்குழாமில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதாகவும் காணப்படுகின்றது. ஏனைய நிறுவனங்களுடன் கைகோர்ப்பதன் மூலமாக, மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு ஆவலாகவுள்ள பெண்களுக்கு தொழில்வாய்ப்புக்களை அலியான்ஸ் தோற்றுவிக்கின்றது.
நான்கு வருட தொழில் அனுபவத்துடன், குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது முழு நேரப் பணியிலிருந்து இடைவெளியை எடுத்துக்கொண்ட பெண்களுக்கு இந்நிகழ்ச்சித்திட்டம் கிடைக்கப்பெறுகின்றது. தொழில் தேடுவதற்கான உதவி முதல் அதிகாரி தர பயிலுனர் பதவிகள் வரை பல்வகைப்பட்ட வாய்ப்புக்களுடன், பெண்கள் வெற்றி காண்பதற்குத் தேவையான வளங்களை “SheResumes” வழங்குகின்றது. இதில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் www.allianz.lk மூலமாக இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து, மீண்டும் தமது தொழிலை ஆரம்பிப்பதற்கு தயாராகவுள்ள பெண்களுக்கு இன்னும் கூடுதலான அளவில் வாய்ப்புக்களை வழங்க உதவுமாறு ஏனைய நிறுவனங்களுக்கும் அலியான்ஸ் லங்கா அழைப்பு விடுக்கின்றது. மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அல்லது எம்முடன் கைகோர்க்க விரும்பினால் 011 2303 300 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக தொடர்பு கொள்ளவும். பன்மைத்துவம் அல்லது உள்ளடக்கம் ஆகியவற்றில் அலியான்ஸ் நிறுவனத்தின் வலுவான கவனத்தை இம்முயற்சி மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், அலியான்ஸ் குழுமத்தின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள “SheSecures” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏனைய பல்வேறு சர்வதேச முயற்சிகளுக்கும் அது ஆதரவளிக்கின்றது.
ஜேர்மனியின் மியூனிக் மாநகரத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட, பிரதானமாக காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிகங்களில் கவனம் செலுத்தியுள்ள ஒரு சர்வதேச நிதிச் சேவைகள் வழங்குனரான Allianz SE ன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களில் ஒன்றாக அலியான்ஸ் லங்கா இயங்கி வருகின்றது.

