May 29, 2025 - 11:46 AM -
0
சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனீகா தம்பதியரின் 3 வயதான மகள் தஸ்விகா, 1,500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை குறைந்த நேரத்தில் கூறினார்.
இந்த நிகழ்வானது சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்களான இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, யாழ். மாவட்டத் தலைவர் துரை பிரனவச் செல்வன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத் தலைவர் ராசதுரை ஜெயசுதர்சன் போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது.
குழந்தையின் முயற்சியை உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள், அதை உலக சாதனையாகப் பதிவு செய்தார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த குழந்தை தஸ்விகாவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், அடையாள அட்டை, தங்கப்பதக்கம் மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்ட அதேவேளை, இச் சிறிய வயதில் அவர் கொண்டிருந்த மொழிபெயர்ப்புத் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பாக மழலை மொழி வித்தகர் என்ற பட்டமும் சாதனைக் குழந்தைக்குச் சூட்டப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி ச.க. கண்ணதாசன் முதன்மை விருந்தினராகப் பங்கு கொண்டு சோழன் உலக சாதனை படைத்த மாணவியை வாழ்த்திப் பாராட்டினார்.
தென்மராட்சிக் கல்வி வலையத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி.இ. அபிராமி சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்டு குழந்தைக்குப் பரிசளித்துப் பாராட்டினார்.
சத்தியா தனுராஜ் - அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் ஒத்துழைப்புடன் நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றது.