May 29, 2025 - 03:17 PM -
0
18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று கடந்த 27 ஆம் திகதி முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2 ஆவது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத 2 அணிகள் குவாலிபையர் 1 சுற்றில் மோதுகிறது. இதனால் கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றாத ஒரு அணி இறுதிப்போட்டிக்கு செல்லவுள்ளது. இந்நிலையில், இந்த 2 அணிகளும் பிளேஆப் சுற்றில் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்.
ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி இதுவரை மொத்தம் 15 பிளேஆப் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 5 போட்டிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 3 இறுதிப் போட்டிகளில் (2009, 2011 மற்றும் 2016) பெங்களூரு அணி தோல்வியடைந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணி இதுவரை 4 ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. இதில் 1 போட்டியில் மட்டும் தான் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
குறிப்பாக 2014 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் பஞ்சாப் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.