ஏனையவை
மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவு - வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

May 30, 2025 - 11:31 AM -

0

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவு - வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

பொது மக்களுக்குச் சிறந்த மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு சம்மாந்துறை சுகாதாரப் பிரிவினர் உணவு நிலையங்களில் அதிரடிப் பரிசோதனைகளை முன்னெடுத்து ஆறு கடை உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இனிப்புக் கடைகள் பலசரக்குக் கடைகள் மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் என்பன இவ்வாறு கடந்த புதன்கிழமை (28) பரிசோதிக்கப்பட்டன. 

இதன் போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஆறு கடை உரிமையாளர்கள் மீது உணவுச் சட்டத்தின் கீழ் நேற்று (29) வழக்குத் தொடரப்பட்டது. 

இதன் போது சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் ஆறு கடை உரிமையாளர்களில் நான்கு பேருக்கு தலா 5,000 ரூபா வீதம் மொத்தம் 20,000 ரூபா அபராதம் விதித்தார். 

மேலும் மன்றிற்கு சமூகமளிக்காத இரு வர்த்தகர்களுக்கும் வேறு ஒரு திகதி நீதிமன்றத்தால் தவணை அறிவிக்கப்பட்டது. 

அண்மைக் காலமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் வழிகாட்டலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர், சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05