செய்திகள்
இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை

May 31, 2025 - 06:18 AM -

0

இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30)  கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

மரணமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்பார்வை செய்தார். மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். 

இந்தக் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05