செய்திகள்
சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களில் 4,623 பேர் பாதிப்பு

May 31, 2025 - 10:56 AM -

0

சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களில் 4,623 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களில் உள்ள 104 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இன்று (31) மற்றும் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்பட்ட பேரழிவுகள் தொடர்பில் விளக்கமளித்த போதே, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரவி ஜெயரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

இந்த சீரற்ற வானிலையால் கம்பஹா மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது, இன்று காலை நிலவரப்படி 327 குடும்பங்களைச் சேர்ந்த 1,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் 32 இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமை, மின் கம்பிகள் அறுந்துள்ளமை போன்ற அனர்த்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக ரவி ஜெயரத்ன தெரிவித்தார். 

நாடளாவிய ரீதியில் சுமார் 1,184 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. 

குறித்த வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார். 

முப்படைகள், பொலிஸார், மாவட்டச் செயலக அதிகாரிகள், தீயணைப்பு பிரிவினர் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து அனர்த்தம் ஏற்பட்ட அனைத்து பகுதிகளையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இருப்பினும், மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ரவி ஜெயரத்ன சுட்டிக்காட்டினார். 

ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் 117 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05