Jun 1, 2025 - 03:36 PM -
0
பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் கூட்டணியில் சேர இலங்கை ஆர்வமாக இருந்தால், ஒரு நாடாக அதற்கான நடைமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். தாகரியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட மாநாட்டில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விசேட மாநாடு பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் நிலையத்தில் இடம்பெற்றது.
இதன்போது, பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை எப்போது இணையும் என்று ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வியை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். கடந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பிதலுடன் நான் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். நான் மொழிபெயர்ப்பாளரின் உதவியுன் பேசினேன். அவர் சரியாக மொழிபெயர்த்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால், தன்னால் ரஷ்யாவுக்கு வருகைத் தர முடியாது என்று ஜனாதிபதி என்னிடம் கூறினார். BRICS இல் சேர வேண்டுமென்றால், ரஷ்யா மட்டுமல்ல, அனைத்து உறுப்பு நாடுகளிடமிருந்தும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும், மேலும் அதற்கு பல படிமுறைகள் உள்ளன.
ரஷ்யாவும் சீனாவும் இலங்கையை ஆதரிக்கின்றன, ஆனால் அதைச் செய்ய, உங்கள் பக்கத்திலும் ஆர்வம் இருக்க வேண்டும். அப்படியொரு ஆர்வம் இருக்கிறதா? எனக்கு அவ்வாறு இருப்பதாக தெரியவில்லை. தயவு செய்து சில நடைமுறை நடவடிக்கைகளை முன்னெடுங்கள். ஷெங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்பிலும் சற்று அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஊடகவியலாளர் - ரஷ்யா சுமார் 3 ஆண்டுகளாக உக்ரைனின் பல பகுதிகளின் மீது தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தி வருகிறது. அந்தப் பகுதிகளின் எதிர்காலம் என்ன?
ரஷ்ய அரசியலமைப்பின் படி, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்ச் மற்றும் சபோரோஷியே பகுதிகள் ரஷ்யாவிற்கு சொந்தமானவை. உக்ரேனிய இராணுவம் சில இடங்களில் உள்ளது, அவர்கள் வெளியேற வேண்டும். அந்த பகுதிகள் பற்றி நாங்கள் கலந்துரையாடப் போவதில்லை. விசேடமாக அவற்றை மீண்டும் வழங்குவது பற்றியும் கலந்துரையாடப் போவதில்லை.

