Jun 1, 2025 - 04:45 PM -
0
ஈரோஸ் ஜனநாயக முன்னணி நடந்து முடிந்த தேர்தலில் மூன்று பிரதேச சபைகளில் மூன்று ஆசனங்களை வென்றுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர் தெரிவின்போது இலஞ்ச ஊழல்களில் சம்பந்தப்பட்ட அல்லது குற்றச்சாட்டுக்கள் உள்ள எந்தவொரு தலைவர் தெரிவிற்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் கௌரவிப்பு நிகழ்வு சத்தியப்பிரமானம் நிகழ்வும் அக்கட்சியின் செயலாளர் ஜீவன் ரஜேந்திரன் தலைமையில் இன்று (01) கொட்டகலை கொமர்சல் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஈரோஸ் ஜனநாயக முன்னணி கடந்த 50 வருட காலமாக மலையகத்திலும் சரி வடகிழக்கிலும் குரல் கொடுத்து வந்தது. ஆனால் முதன் முறையாக உள்ளுராட்சி சபைகளில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்களை பெற்றுள்ளது. இந்த வெற்றியானது மக்களினது வெற்றியாகும் காரணம் ஆண்டாண்டு காலமாக மக்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் உள்ளூராட்சி மூலம் சேவைகள் தோட்ட பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலை மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எமது உள்ளூராட்சி சபைகளிலும் எமது உறுப்பினர்கள் செயப்படுவார்கள். மக்களுக்கு என்னென்ன சேவைகள் உள்ளூராட்சி சபைகள் மூலம் முன்னெடுக்க முடியுமோ அதனை முன்னெடுப்போம்.
உள்ளூராட்சி சபைகள் என்பது அரசாங்கமோ அல்லது தனி ஒரு கட்சியோ ஆட்சி செய்ய வேண்டும் என்பதல்ல. இது ஒரு மக்களின் அபிவிருத்திக்கான மன்றம். அதில் அனைவரும் இணைந்தே செயப்பட வேண்டும். எமது கட்சி நல்ல திட்டங்களுக்கு மக்களின் அபிவிருத்திக்கும் ஒரு தடையாக நிற்காது. அதனை முன்னெடுப்பதற்கான அழுத்தத்தினை பிரயோகிப்போம். இன்று தெரிவான உறுப்பினர்கள் அனைவரும் சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒருமுறை கட்சியின் முடிவுக்கேற்ப மாற்றப்படுவர் எனவும் கட்சி மாறினாலோ அல்லது கட்சிக்கு எதிராக செயப்பட்டாலோ இவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.
இதன்போது தெரிவான உறுப்பினர்கள் சத்தியபிரமணம் செய்து கொண்டனர். இந் நிகழ்வுக்கு கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
--