Jun 1, 2025 - 09:27 PM -
0
செவனகல சீனித் தொழிற்சாலையை மூடுவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
விவசாயிகள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழு, தங்கள் அரசியல் சுய இலாபத்தின் அடிப்படையில், சீனி தொழிற்சாலை மூடப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி சமீபத்தில் ஒரு ஊடகவியாளர் சந்திப்பை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை சீனி நிறுவனத்திற்குச் சொந்தமான செவனகல சீனித் தொழிற்சாலையானது கரும்பு அறுவடையை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.
மே 21 முதல் தொழிற்சாலையின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாகவும், நிறுவனம் நட்டம் அடைவதாகக் கூறி அதிகாரிகள் தங்கள் அறுவடையை வாங்க மறுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த நாளில் இலங்கை சீனி நிறுவனத்தின் தலைவர் சந்தமாலி சந்திரசேகரவிடம் அத தெரண செய்தியாளர் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அன்றிரவு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு, செவனகல சர்க்கரை தொழிற்சாலை மூடப்படும் அபாயம் இல்லை என்று குறிப்பிட்டது.
இன்று (01) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், தொடர்புடைய பிரசாரத்தின் பின்னணியில் ஒரு அரசியல் நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இதேவேளை, எதிர்காலத்தில் தொழிற்சாலைகளில் இருந்து ஒரு கிலோ உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி 236 ரூபாவுக்கு சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

