செய்திகள்
எதிர்க்கட்சி வேட்பாளர் லீ, தென்கொரிய ஜனாதிபதியாகும் சாத்தியம்

Jun 3, 2025 - 11:03 PM -

0

எதிர்க்கட்சி வேட்பாளர் லீ, தென்கொரிய ஜனாதிபதியாகும் சாத்தியம்

தென்கொரிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு லீ ஜே மியூங் அந்நாட்டின் ஜனாதிபதியாகும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக வாக்குப்பதிவுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. 

இதையடுத்து, வாக்குப்பதிவுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பைத் தென்கொரியாவின் மூன்று பிரதான ஒளிபரப்பாளர்களான எம்பிசி, கேபிஎஸ், எஸ்பிஎஸ் ஆகியவை இணைந்து நடத்தின. 

வாக்குப்பதிவுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பில் திரு லீ 51.7 சதவீத வாக்குகள் கிடைக்கும் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

ஆளுங்கட்சியான மக்கள் சக்திக் கட்சியின் கிம் மூன் சூவுக்கு 39.3 சதவீத வாக்குகளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் லீ ஜுன் சியோக்கிற்கு 7.7 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. 

வாக்குப்பதிவுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பில் நாடெங்கும் உள்ள 325 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்த ஏறத்தாழ 100,000 வாக்காளர்கள் பங்கெடுத்தனர். 

தென்கொரியாவில் மொத்தம் 14,295 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. 

44.39 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். 

அவர்களில் 15.42 மில்லியன் பேர் மே 26, 27ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட வாக்களிப்பில் முன்கூட்டியே வாக்களித்தனர். 

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதற்கு முன்பாகவே திரு லீ அபார வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

சட்டத்தரணியான திரு லீ, 2005ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். 

அவருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அவர் ஒருவேளை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தால் என்னவாகும் என்று தெளிவுபடுத்தப்படவில்லை. 

தென்கொரிய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் ஜனாதிபதி பதவி வகிப்பவருக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது. 

கிளர்ச்சி, தேசத் துரோகம் ஆகியவை தொடர்பான வழக்குகள் மட்டும் இதற்கு விதிவிலக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05