Jun 5, 2025 - 11:16 AM -
0
இலங்கை தர மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாட்டு சங்கத்தின் (SLAAQP) முன்னணி முயற்சியான தேசிய தர மற்றும் உற்பத்தித் திறன் மாநாடு (NCQP) 2025, கடந்த மே 21, 22 ஆகிய தினங்களில் கல்கிஸ்ஸை மவுண்ட் லவினியா ஹோட்டலில் வெற்றிகரமாக இடம்பெற்றது. 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட குழுக்களை ஒன்றிணைத்த இந்த நிகழ்வின் ஊடாக, இலங்கையானது தர மேம்பாட்டில் கொண்டுள்ள புத்தாக்கம் மற்றும் விசேடத்துவத்திற்கான அர்ப்பணிப்பை வெளிக்காட்டியிருந்தது.
இவ்வருட மாநாடு, Quality Control Circles (QCC), Lean Six Sigma, Kaizen போன்ற உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை எடுத்துக் காட்டியது. இது தொழில்துறைகள் முழுவதும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வலியுறுத்தியது. இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, தேசிய தொழில் முயற்சியாளர் மேம்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரும் அதன் பணிப்பாளர் நாயகமுமான லக்ஷ்மன் அபேசேகர, Ansell நிறுவனத்தின் சிரேஷ்ட பணிப்பாளரும் நாட்டுக்கான தலைவருமான ரமேஷ் நாணயக்கார, MAS Holdings நிறுவனத்தின் Group Process Excellence பணிப்பாளர் சமந்த செனவிரத்ன ஆகியோர், இலங்கையின் போட்டித்திறனை வலுப்படுத்துவற்கு தரத்தின் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினர்.
இது தொடர்பில் SLAAQP தலைவர் கலாநிதி சுரானி டயஸ் கருத்து வெளியிடுகையில், “இந்த வருடத்தின் கருப்பொருள், எல்லைகளைக் கடந்த தரம், சந்தை போட்டித்திறனுக்கு உற்பத்தித் திறனும் புத்தாக்கமும் என்பதன் மூலம், தொழில்துறைகளில் புத்தாக்கத்தின் மாற்றத்திறனை பிரதிபலிக்கின்றோம். தேசிய உற்பத்தித் திறன் இயக்கத்தில் முன்னிலை வகிப்பதற்கும், சாதனைகளை கொண்டாடுவதற்கும் தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கவும் இந்த தளத்தை வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம்” என்றார்.
தொழிற்துறை மற்றும் தைத்த ஆடைகள், பொதியிடல், சுகாதார சேவைகள், வங்கிச் சேவைகள் போன்ற சேவைத் துறைகளுக்கான பல்வேறு சிறந்த தீர்வுகள் இந்த மாநாட்டை அலங்கரித்தன. நிபுணர்கள் கொண்ட நடுவர் குழு 350 தங்க விருதுகள், 73 வெள்ளி விருதுகள், 8 வெண்கல விருதுகளை வழங்கி வைத்ததன் மூலம் கலந்துகொண்ட அணிகளின் புத்தாக்கத்தையும் அவர்கள் வெளிப்படுத்திய தாக்கத்தையும் பாராட்டி கௌரவித்தது.
இதன் முக்கிய நிகழ்வாக, Sunil G Wijesinha Quality Control Circle Excellence Award எனும் விருது, தர முகாமைத்துவத்தில் சிறந்த திட்டங்களுக்கு வழங்கப்பட்டது. மே 21ஆம் திகதி, Noritake Lanka Porcelain நிறுவனத்தின் Guardian குழுவிற்கு Reduction of Hankyo Mori Repairs எனும் திட்டத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது. மே 22ஆம் திகதி, CBL Foods International நிறுவனத்தின் The Achievers குழுவினருக்கு அதிக பிஸ்கட் எடையை 12% ஆக குறைத்தமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இது தொடர்பில் NCQP 2025 தலைவர் பியூமி பெரேரா தெரிவிக்கையில்: “தொடர்ச்சியான மேம்பாடே நிறுவன வெற்றிக்கு அடித்தளமாகும். அனைத்து நிலைகளிலும் குழுக்களை ஈடுபடுத்தி செலவைக் குறைத்து திறனை மேம்படுத்தும் ஒரேயொரு நிகழ்வாக இந்த மாநாடு அமைகின்றது. இவ்வாறான முயற்சிகள் இலங்கையின் ஈடுகொடுக்கும் தன்மையை வலுப்படுத்தி, உலக சந்தைகளுக்கான வாயில்களை திறக்கின்றன.”
International Convention on Quality Control Circles (ICQCC) மாநாட்டில் இலங்கை பிரதிநிதியான SLAAQP, தங்க விருது பெற்ற குழுக்கள் உலக அரங்கில் போட்டியிடும் வாய்ப்பு பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலைபேறான தன்மை ஆகியவற்றிற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
விசேடத்துவத்தை முன்னேற்றுவதற்கான SLAAQP இன் அர்ப்பணிப்பு பற்றி கலாநிதி டயஸ் தெரிவிக்கையில்: “தரத்திற்கான தலைமைத்துவத்தை மேம்படுத்துவதும், உற்பத்தித் திறனில் முன்னேற்றங்களை முன்னெடுப்பதன் மூலமும் இலங்கையை ஒரு முன்னிலை புத்தாக்கப் பிரதிநிதியாக நிலைநிறுத்தி வருகிறோம். இது நீடித்த செழிப்பிற்கும், உலகளாவிய அங்கீகாரத்திற்கும் வழிவகுக்கும்” என்றார்.
NCQP, 5S விருதுகள், தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் SLAAQP ஆனது நிறுவன மாற்றத்திற்கு முன்னோடியாக இருந்து வந்துள்ளது. தனது தாக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இச்சங்கமானது பல்வேறு மூலோபாய முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் Ayano Total Quality Management (TQM) Excellence Award, Green Productivity Awards மற்றும் 2025 ஜூலை 29 இடம்பெறும் அதன் இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு உள்ளிட்டவை அடங்கும்.
வணிக சமூகத்துடன் மேலும் உறவை வலுப்படுத்த SLAAQP ஆனது, அந்த ஆராய்ச்சி மாநாட்டுடன் இணைந்த ஒரு வணிக ஆலோசனைக் கூட்டத்தையும் நடாத்தவுள்ளது. உலகளாவிய தொடர்புகளைக் கொண்ட ஒரு அமைப்பு எனும் வகையில், Asian Network for Quality (ANQ), ICQCC, Union of Japanese Scientists and Engineers (JUSE), Dr. Mikel J Harry Six Sigma Management Institute Inc., USA போன்ற தலைசிறந்த நிறுவங்களுடன் கூட்டுப் பணிகளை அது முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தில் ஈடுபட ஆர்வமுள்ள நிறுவனங்கள், தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த SLAAQP சங்கத்துடன் இணைந்து தங்கள் தரம் மற்றும் உற்பத்தித் தரங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய இணையுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தொடர்பான மேலதிக தகவலுக்கு, SLAAQP செயலாளர் கலாநிதி ஹேமந்த வீரகோன் அவர்களை secretary@slaaqp.org எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக அல்லது 0718385100 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்புகொள்ளலாம்.

