செய்திகள்
இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா தொகை பறிமுதல்

Jun 7, 2025 - 06:48 PM -

0

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா தொகை பறிமுதல்

ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கஞ்சாவை தமிழக பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

காரில் கஞ்சாவைக் கடத்தி வந்த 6 பேரைக் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. 

கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கைக்குக் கடத்துவதற்காக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 175 கிலோ ஏலக்காயினை தங்கச்சிமடம் பொலிஸார் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில் இலங்கைக்குக் கடத்துவதற்காக ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக துறைமுகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. 

இதையடுத்து கடற்கரைப் பகுதியில் உள்ள எம்.ஆர்.டி மீன் கம்பெனி அருகில் சந்தேகப்படும் நிலையில் கார் ஒன்று நின்றுள்ளது. 

அந்த காரை பொலிஸார் சோதனையிட்ட போது, காரினுள் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

காரில் இருந்த 70 கிலோ கஞ்சாவைக் கைபற்றிய பொலிஸார், இது தொடர்பாக தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் இலங்கைக்குக் கடத்த முயன்ற கஞ்சா குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05